

லக்கிம்பூர் கெரி பகுதியில் விவசாயிகள் 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜெய் மிஸ்ரா தெனி ராஜினாமா செய்ய வேண்டும், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கூட இந்த அளவு கொடுமை நடந்ததில்லை என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
லக்கிம்பூர் கெரி பகுதியில் நடந்த போராட்டத்தில் நடந்த வன்முறையில் 8 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று செல்ல இருந்தார்.
ஆனால், அவரை வெளியே செல்லவிடாமல் அவரது வீட்டின் முன் போலீஸார் தடுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அகிலேஷ் யாதவ், தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோருடன் வீட்டுக்கு வெளியே இருக்கும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து, போலீஸார் அகிலேஷ் யாதவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள் ராம் கோபால் யாதவ், எம்எல்சி ஆனந்த் பதூரியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அகிலேஷ் யாதவ் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் முன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''யாரெல்லாம் இந்த ஆட்சிக்கு எதிராக எதிர்த்துப் பேசுகிறார்களோ, குரல் கொடுக்கிறார்களோ அவர்கள் மீது வாகனம் ஏற்றப்படுகிறது. லக்கிம்பூர் சம்பவத்துக்குக் காரணமாக மத்திய அமைச்சர், அவரின் மகனைக் கைது செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகள் 8 பேரின் குடும்பத்தாருக்கும் அரசு வேலை, ரூ.2 கோடி இழப்பீடும் வழங்கிட வேண்டும். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கூட இதுபோன்ற கொடுமைகள் நடந்ததில்லை.
ஆனால், அதைவிட மோசமாக இந்த ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான கொடுமைகளை இழைக்கிறது. எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் லக்கிம்பூர் கெரிக்குச் செல்லக்கூடாது என்று உ.பி. அரசு விரும்புகிறது. எதை உ.பி. அரசு மறைக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ராந்தவா ஆகியோர் லக்கிம்பூர் செல்ல இன்று திட்டமிட்டனர். ஆனால், அவர்களுக்கு உ.பி. அரசு அனுமதி மறுத்துவிட்டது.