

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரி பகுதியில் நடந்த வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரைப் பார்த்து ஆறுதல் தெரிவிக்க வரும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் துணை முதல்வர் இருவரின் விமானத்தையும் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றனர். அமைச்சர்களுக்கும், பாஜக தலைவர்களுக்கும் கருப்புக் கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
லக்கிம்பூரில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா கருப்புக் கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டனர். அப்போது விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முயன்றனர்.
துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது.
இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அங்கு கடும் வன்முறை மூண்டது. இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனின் கார் உள்பட பல கார்களை விவசாயிகள் தீ வைத்துக் கொளுத்தினார்கள். மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோதச் செய்தும், துப்பாக்கியால் சுட்டும் 3 பேரைக் கொன்றதாக விவசாயிகள் பகீர் குற்றம் சாட்டினர். இதனிடையே சம்பவ இடத்தில் எனது மகன் இல்லை என மிஷ்ரா விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க பஞ்சாப் துணை முதல்வர், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இன்று லக்னோ வர இருந்தனர்.
ஆனால், சத்தீஸ்கர் முதல்வர், பஞ்சாப் துணை முதல்வர் இருவரும் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுத்து உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
உ.பி. கூடுதல் தலைமைச் செயலாளர் அவானிஷ் குமார் அவஸ்தி இந்திய விமானக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில், “லக்கிம்பூர் கெரி சம்பவத்துக்குப் பின், அங்கு சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்க மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆதலால், சத்தீஸ்கர் முதல்வர், பஞ்சாப் துணை முதல்வர் சுக்கிந்தர் சிங் ராந்தவா வரும் விமானத்தை லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச அரசின் உத்தரவுக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.