

மத்திய பிரதேசத்தில் ஒரு மக்களவை, 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் பாஜகவும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸும் பரஸ்பரம் விமர்சனம் செய்து வருகின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத்தின் (72) உடல்நிலையை சுட்டிக் காட்டி, அவரைவிட 10 வயது இளையவரான முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சனம் செய்து வருகிறார். இதுகுறித்து கமல்நாத் கூறியிருப்பதாவது:
எனக்கு வயதாகிவிட்டது. அடிக்கடி நோய்வாய்ப்படுகிறேன் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சனம் செய்து வருகிறார். இப்போது அவருக்கு பகிரங்கமாக ஒரு சவால் விடுகிறேன். என்னோடு ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க அவர் தயாரா? கரோனாவில் இருந்து மீண்ட எனக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டன. இதற்கான பரிசோதனைக்காகவே டெல்லி வந்துள்ளேன். மருத்துவ பரிசோதனைகளில் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ம.பி. பாஜக தலைவர் தீபக் விஜய்வர்கியா கூறும்போது, "மாநிலத்தின் வளர்ச்சி, மக்கள் நலனுக்கான ஓட்டப் பந்தயத்தில் பாஜக பங்கேற்றுள்ளது. இடைத்தேர்தலில் யார் வெற்றியாளர் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.