Published : 03 Oct 2021 04:03 PM
Last Updated : 03 Oct 2021 04:03 PM

‘‘என்னை அதிகாரத்திலிருந்து அகற்ற மத்திய அரசு சதி செய்தது; மக்கள் முறியடித்து விட்டனர்’’- மம்தா பானர்ஜி பேட்டி

மத்திய அரசு என்னை அதிகாரத்திலிருந்து அகற்ற சதித் திட்டங்களை தீட்டியது, ஆனால் அந்த அனைத்து சதிகளையும் மக்கள் முறியடித்து விட்டனர் என பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியில் பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார்.

செப்.30-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று அங்கு, வாக்கு எண்ணிக்கை நடந்தது.அங்கு 14 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 82,068 வாக்குகள் பெற்றார். பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் 25,680 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

மம்தா பானர்ஜி 58,832 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் பவானிபூரில் 54,213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த வெற்றி குறித்து கூறியதாவது:

நான் பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். இந்த தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் வெற்றியை பதிவு செய்துள்ளேன்.

இங்குள்ள சுமார் 46% மக்கள் வங்காளத்தை சாராதவர்கள். அவர்கள் அனைவரும் எனக்கு வாக்களித்துள்ளனர். மேற்கு வங்க மக்கள் மட்டுமின்றி நாடே பவானிபூரைப் பார்க்கிறது. இந்த வெற்றி என்னை ஊக்கப்படுத்துகிறது.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்தே மத்திய அரசு என்னை அதிகாரத்திலிருந்து அகற்ற சதித் திட்டங்களை தீட்டியது. எப்படியும் என்னை தோற்கடித்து விட வேண்டும் என முயன்றது. நான் தேர்தலில் போட்டியிடாதபடி என் காலில் காயம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் அந்த அனைத்து சதிகளையும் மக்கள் முறியடித்து விட்டனர். எங்களுக்காக வாக்களித்த பொதுமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையத்துக்கும் எனது நன்றிகள்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இன்று மேற்கு வங்கத்தில் வெற்றி விழாக்கள், ஊர்வலங்கள் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பினால் கொண்டாடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x