அனைத்து வாகனங்களும் 100% எத்தனாலில் ஓட வேண்டும்: நிதின் கட்கரி வலியுறுத்தல்

அனைத்து வாகனங்களும் 100% எத்தனாலில் ஓட வேண்டும்: நிதின் கட்கரி வலியுறுத்தல்
Updated on
1 min read

நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களும் 100% எத்தனாலில் ஓட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

ரூ 4,075 கோடி மதிப்பிலான 527 கிலோமீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் இருந்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி இன்று தொடங்கி வைத்தார்.

அகமதுநகரிலுள்ள கேட்கானில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் திட்டங்களுக்கான பூமிபூஜை மற்றும் நாட்டுக்கு அர்ப்பணித்தல் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய கட்கரி கூறியதாவது:
தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய தேவைகள். ஏழ்மை, பசி மற்றும் வேலை வாய்ப்பின்மையை நாட்டிலிருந்து ஒழிக்கவும், கிராம மக்கள், ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காகவும் மேற்கண்ட துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

சர்க்கரையை எத்தனாலாக மாற்றுவது முக்கியத்துவம் வாய்ந்தது. எத்தனால் உற்பத்தி நாட்டின் எரிபொருள் செலவுகளை குறைக்கும். பிரேசிலை போன்று வாகனங்களை மின்சாரம் மற்றும் எத்தனாலில் இயக்குவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.

நம் நாடு 4.65 பில்லியன் லிட்டர் எத்தனாலை கடந்த ஆண்டு உற்பத்தி செய்தது. நமக்கு 16.5 பில்லியன் லிட்டர் எத்தனால் தேவை. எனவே எவ்வளவு எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ளும்.

பெட்ரோலை விட எத்தனால் சிறப்பானது மற்றும் விலை குறைவானது. நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களும் 100% எத்தனாலில் ஓட வேண்டும்.

மாநில அரசு எங்கெல்லாம் நிலத்தை வழங்குகிறதோ அங்கெல்லாம் சரக்கு போக்குவரத்து பூங்காக்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் போக்குவரத்து நகரங்களை உருவாக்க மத்திய அரசு தயாராக உள்ளது. சர்க்கரை தொழில் மற்றும் பால் உற்பத்தியின் காரணமாக மேற்கு மகாராஷ்டிராவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in