

நெல் கொள்முதல் தாமத அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹரியாணாவில் எம்.பி.,எம்எல்ஏக்களின் வீடுகளை முற்றுகையிட முயன்ற விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் மோதல் மூண்டது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. எனினும், விவசாய சங்கங்கள் இதற்கு ஒத்துழைக்காததால் போராட்டம் நீடித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், “மழைக்காலம் தாமதமாக தொடங்கியதால் பஞ்சாப், ஹரியாணாவில் நெல் கொள்முதல் அக்டோபர் 11-ம் தேதி வரை தள்ளி வைக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு எதிராக வும், உடனடியாக நெல் கொள் முதலை தொடங்க வலியுறுத்தியும் ஹரியாணாவில் அனைத்து கட்சிகளை சேர்ந்த எம்.பி., எம்எல்ஏக்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா நேற்று முன்தினம் அறிவித்தது.
பேரணி
அதன்படி, ஹரியாணாவின் ஃபடேகாபாத், நர்வாணா, அம்பாலா, கர்னால், சிர்ஸா உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களின் வீடுகளை நோக்கி நேற்று பிற்பகல் விவசாயிகள் டிராக்டர்களில் பேரணியாக சென்றனர்.
அங்கிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பல இடங்களில் போலீ ஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில பகுதிகளில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது. இதில் விவசாயிகளும், போலீஸாரும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர,பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கர்னாலில் உள்ளமுதல்வர் மனோகர்லால் கட்டார்வீடு அமைந்திருக்கும் சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவத்தினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். -பிடிஐ