

பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குடன், காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு மோதல் போக்கு நீடித்தது. இதையடுத்து சித்துவை சமாதானப்படுத்த அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதனிடையே அமரீந்தர் சிங்கின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தற்போது பதவியில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் சித்துவும் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனிடையே, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியுடன், சித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து தொடர்ந்து நீடிப்பார் என்றும் அதிருப்தி பிரச்னைகளுக்கு தீர்வு காண பஞ்சாப் முதல்வர் சரண்ஜித், மாநில தலைவர் சித்து, கட்சி மேலிட நிர்வாகிகள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் கொள்கைகளை நிலைநாட்டு வேன். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு ஆதரவாக நிற்பேன். எல்லா எதிர்மறை சக்திகளும் என்னை தோற்கடிக்க முயற்சிக்கட்டும், நேர்மறை ஆற்றலின் மூலம் பஞ்சாப்பை வெல்லச் செய்வேன். பஞ்சாப் வெற்றி பெறும். பஞ்சாப் மக்கள் வெற்றி பெறுவார்கள்’’ என்று கூறியுள்ளார்.