Published : 03 Oct 2021 03:10 AM
Last Updated : 03 Oct 2021 03:10 AM

லடாக் எல்லையில் சீன படைகள் குவிப்பு

லடாக் எல்லையில் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதற்கு இணையாக இந்திய படைகள் எல்லையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக இந்திய ராணுவ தளபதி நராவனே தெரிவித்துள்ளார்.

லடாக்கின் காராகோரத்தில் இருந்து வடகிழக்கின் அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவுக்கு இந்திய, சீனா எல்லைப் பகுதி நீள்கிறது. லடாக் மற்றும் வடகிழக்கில் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீடிக்கிறது.

கடந்த ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஆண்டு ஜூன் 15-ம்தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள், வீரமரணம் அடைந்தனர்.

சீன தரப்பில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக அமெரிக்க, ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. நீண்ட காலதாமதத்துக்குப் பிறகு கல்வான் மோதலில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக கடந்த பிப்ரவரியில் சீன ராணுவம் விளக்கம் அளித்தது.

எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளின் ராணுவ மூத்த அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதில் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இருந்து இரு நாடுகளின் படைகளும் வாபஸ் பெறப்பட்டன.

இந்த சூழலில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் மீண்டும் குவிக்கப்பட்டு வருகிறது. எல்லை அருகேயுள்ள சீனாவின் ஹோடான் விமான படை தளத்தில் அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளன. எல்லையில் 50,000 சீன வீரர்களும் அதிநவீனஆயுதங்களும் குவிக்கப்பட்டி ருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதைத் தொடர்ந்து இந்திய ராணுவ தளபதி நராவனே கடந்த இரு நாட்களாக லடாக் எல்லைப் பகுதிகளில் ஆய்வு செய்தார். குறிப்பாக ராணுவ வீரர்களின் தயார் நிலை குறித்து அவர் ஆய்வு நடத்தினார். அவர் நேற்று கூறியதாவது:

எல்லையில் சீன வீரர்களின் நடமாட்டத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். சீனவீரர்களுக்கு இணையாக இந்தியவீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். சீன ஆயுதங்களுக்கு இணையான ஆயுதங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது. மேற்கு, கிழக்கு எல்லைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்.

கடந்த 6 மாதங்களாக லடாக்எல்லையில் அமைதி நீடிக்கிறது.இதுவரை 12 சுற்று பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த மாதத்தின் 2-வது வாரத்தில் இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் சந்தித்துப் பேச உள்ளனர்.

அப்போது எல்லையில் படைகள் குறைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். கருத்துவேறுபாடுகளுக்கு தீர்வு காணப்படும் என நம்புகிறேன்.

கடந்த 10 நாட்களில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் 2 முறை சண்டை நிறுத்தத்தை மீறியுள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டு ராணுவ அதிகாரிகளிடம் கண்டனத்தை பதிவு செய்துள் ளோம். ஆப்கானிஸ்தான் நில வரத்தை இந்திய ராணுவம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இப்போதைய நிலை யில் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். - பிடிஐ

தயார் நிலையில் இந்திய பீரங்கி படை

இந்திய ராணுவத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் கே-9 வஜ்ரா பீரங்கிகள் சேர்க்கப்பட்டன. இந்த பீரங்கி மூலம் 52 கி.மீ. தொலைவுக்கு தாக்குதல் நடத்த முடியும். எந்த நிலப்பரப்பிலும் வேகமாக செல்லக்கூடியது. கடந்த பிப்ரவரி முதலே லடாக் மலைப் பகுதியில் கே-9 வஜ்ரா பீரங்கிகள் குவிக்கப்பட்டன.

சீன படைகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த அதிநவீன பீரங்கிகளை பயன்படுத்தும் இந்திய பீரங்கி படை லடாக் எல்லையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவ தளபதி நராவனே கூறும்போது, "லடாக்கின் உயரமான மலைப் பகுதிகளில் கே-9 வஜ்ரா பீரங்கிகள் சிறப்பாக செயல்படுகின்றன. இந்த பீரங்கிகளை எல்லையில் நிறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார். கே-9 வஜ்ரா பீரங்கிகள் மட்டுமன்றி பல்வேறு வகையான பீரங்கிகள், ரஃபேல் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x