காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு

காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகா எதிர்ப்பு
Updated on
1 min read

காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு கர்நாடகா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர் சச்சரவுகள் தீர்ப்பாயம் காவிரி நதிநீரை கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதனை நடைமுறைப் படுத்தவே மத்திய அரசு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க முயற்சி செய்து வருகிறது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா என்ன கூறுகிறார் எனில், காவிரி நதிநீர் மாநிலங்களிடையே பகிர்ந்து கொள்ளப்படவேண்டும் என்பதன் மீதான மேல் முறையீடுகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது வாரியம் அமைப்பது ஏற்புடையதல்ல என்கிறார்.

இது குறித்து சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடியை வரும் 10ஆம் தேதி சந்தித்து மாநிலத்தின் நிலைப்பாட்டை விளக்க நேரம் கேட்டுள்ளார்.

மாநில தலைமைச் செயலக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற முதல்வர் சித்தராமையா காவிரி மேலாண்மை ஆணையம் பற்றிய மத்திய அரசின் முயற்சி குறித்து இத்தகைய எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர், மோடி அரசின் நான்கு மத்திய அமைச்சர்களுக்கு இது குறித்து தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். கர்நாடக மாநிலத்தின் நீராதார நலன்களை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் அது கர்நாடக மாநிலத்தின் நலத்தைப் பெரிதும் பாதிக்கும், குறிப்பாக பெங்களூரு நகருக்கு குடிநீர் வினியோகம் மிகப்பெரிய அளவு பாதிப்படையும் என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in