

காந்தி ஜெயந்தியன்று கோட்சேவைக் கொண்டாடுவோர் தேசத்தை அவமதிக்கின்றனர். அவர்களின் பெயர்களை சமூகத்துக்கு தெரியப்படுத்தி அவமானப்படுத்த வேண்டும் என்று பாஜக எம்.பி. வருண் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சிலர் ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் கோட்சே ஜிந்தாபாத் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
இது குறித்து பாஜக எம்.பி.யும் இந்திரா காந்தியின் பேரனுமான வருண் காந்தி தனது ட்விட்டரில் காட்டமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியா எப்போதுமே ஆன்மிகத்தில் அதீதசக்தி வாய்ந்த தேசமாக இருந்திருக்கிறது. ஆனால் மகாத்மா காந்தி தான் அவரது வாழ்க்கை முறையின் மூலம் தேசத்தின் ஆன்மிக அடிநாதத்தை எடுத்துரைத்தார். நமக்கு ஒரு தார்மீக பொறுப்பையும் கற்றுக்கொடுத்தார். அதுதான் இன்றளவும் நம் தேசத்தின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் இன்று சிலர் கோட்சே ஜிந்தாபாத் என ட்வீட் செய்கின்றனர். அவர் பொறுப்பற்ற தன்மையால் தேசத்தை அவமதித்துள்ளனர்.
இவ்வாறு வருண் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இன்று சர்வதேச சமூகத்தில் இந்தியாவுக்கு இருக்கும் மாண்புக்கு காந்தியின் கொள்கைகளும் ஒரு காரணம். அவரது பிறந்தநாளில் கோட்சே ஜிந்தாபாத் கூறி தேசத்தை அவமதிப்பவர்களை பெயரைக் குறிப்பிட்டு அடையாளத்தைத் தெரிவித்து அவர்களை அவமானப்படுத்த வேண்டும்.
இதுபோன்ற பைத்தியக்கார மனப்பான்மை கொண்டவர்களை பிரதான அரசியலில் அனுமதிக்கக்கூடாது என்றும் வருண் கூறியிருக்கிறார்.