

ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் நாட்டில் 1.25 லட்சம் கிராமங்களில் உள்ள 5 கோடி வீடுகளுக்கு சுகாதாரமான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்ததோடு தெரிவித்தார்.
ஜல் ஜீவன் இயக்கத்தின் செயலியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கவும், வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள், நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், மனிதநேயர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இங்குள்ள ஏழை மக்கள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஆஸ்ரமங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் சுகாதாரமான குடிநீர் பெற உதவி செய்யலாம். இதற்காக ராஷ்ட்ரிய ஜல் ஜீவன் கோஷ் திட்டத்தையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.
ஜல்ஜீவன் இயக்கத்தின் ஒருபகுதியான கிராம பஞ்சாயத்து மற்றும் கிராம குடிநீர் மற்றும் துப்புறவுக் குழுவுடன்(விடபிள்யுஎஸ்சி) பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் மக்களுக்கு குடிநீர் மட்டும் கிடைக்கவில்லை, கிராமங்கள், பெண்கள் என அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது.சுதந்திரம் பெற்றதிலிருந்து 2019ம் ஆண்டுவரை நாட்டில் 3 கோடி வீடுகளுக்குத்தான் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், ஜல் ஜீவன் இயக்கம் கடந்த2019ம் ஆண்டு தொடங்கப்பட்டபின் 1.25 லட்சம் கிராமங்களில் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று நாட்டில் 80மாவட்டங்களில் உள்ள 1.25 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கிடைத்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் செய்ததை நாங்கள் 2 ஆண்டுகளில் முடித்துள்ளோம். குழாய்மூலம் குடிநீர் இணைப்பு 31 லட்சமாக இருந்தது, தற்போது 1.60 கோடியாக உயர்ந்துள்ளது.
நாட்டின் எந்தப் பகுதிக்கும் குடிநீர் டேங்கர் அல்லது ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் சூழல் எழவில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள், கொள்கைகளை வடிவமைத்தவர்கள் குடிநீர் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டனர். அவர்கள் தங்கள் வீடுகளுக்கும், நீச்சல் குளத்துக்கும் மட்டும்தான் தண்ணீர் கொண்டுவந்து சேர்த்தனர்.
கடந்த ஆட்சியாளர்கள் மக்களின் ஏழ்மையைப் பார்க்கவில்லை, அவர்களை கவரமட்டுமே செய்தார்கள். கடந்த ஆட்சியாளர்கள் மக்களக்கு விழிப்புணர்வையும், அறிவார்ந்த விஷயங்களையும் புகட்டியிருக்க வேண்டும். நல்ல கிராமத்தை உருவாக்க உழைத்திருக்க வேண்டும் ஆனால் அவர்களைப் பொருத்தவரை கிராமங்களில் குறைபாடுகள் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.