முதல்வர் தருண் கோகாயின் முதுமையைக் குறிப்பிட்டு அசாமில் நரேந்திர மோடி பேச்சு

முதல்வர் தருண் கோகாயின் முதுமையைக் குறிப்பிட்டு அசாமில் நரேந்திர மோடி பேச்சு
Updated on
2 min read

ஏப்ரல் 4-ம் தேதி அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையடுத்து தின்சுகியாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, அசாம் முதல்வர் தருண் கோகாயின் முதுமையைக் குறிப்பிட்டு உரை நிகழ்த்தினார்.

அசாம் முதல்வர் வேட்பாளர் சர்பானந்தா சோனாவலின் திறமைகளை புகழ்ந்து பேசி அவரை பாஜக ஆட்சி முதல்வராக்குமாறு மோடி கேட்டுக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

என்னிடம் 3 திட்டங்களே உள்ளன. அவை வளர்ச்சி, வேகமான வளர்ச்சி, அனைத்து தரப்பு வளர்ச்சி. எனது போட்டி முதல்வர் தருண் கோகாயுடன் அல்ல, காங்கிரஸ் ஆட்சியில் உண்டான வறுமை, ஊழல், அழிவு ஆகியவற்றை எதிர்த்துப் போராடி ஒழிப்பதே.

இன்னும் சில ஆண்டுகளில் 90 வயதை எட்டும் காங்கிரஸ் தலைவர் (தருண் கோகாய்) மோடியுடனேயே தனது போட்டி என்று அறிவிக்கிறார். மரியாதைக்குரிய முதல்வர் அவர்களே, நீங்கள் முதியவர் நான் இளையவன், நான் உங்கள் வயதுக்குரிய மரியாதையை அளிக்கிறேன். நமது பண்பாட்டில் இளம் தலைமுறையினர் மூத்தோருடன் சண்டையிடுவதில்லை, போட்டியிடுவதில்லை. மூத்தோர்கள் இளையோர்களை ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.

நான் எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவும் போராடவில்லை. சர்பானந்தா சோனாவல் என்பவர்தான் அசாமின் ஒரே மகிழ்ச்சி. சர்பானந்தா சோனாவலிடம் 5 ஆண்டுகால ஆட்சியைக் கொடுத்துப் பாருங்கள், அசாம் மாநிலம் அதன் அனைத்து கடினங்களிலிருந்தும் விடுவிக்கப்படும்.

60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி சாதித்தது என்ன? அசாம் இன்றைய நிலையில் 5-வது ஏழை மாநிலமாகும். வளர்ச்சி இல்லை, இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை. அசாமுக்கு இந்த துர்பாக்கியத்தைக் கொண்டு வந்தது யார்?

ஒவ்வொரு கிராமமும் மின்சாரத்துடன் வளர்ச்சியுறுவது அவசியம், நல்ல கல்வி வேண்டும், தொழிற்சாலைகள் நடைபெற வேண்டும், கிராம மக்கள் டிவி பார்க்க வேண்டும், ஆனால் 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 1000 கிராமங்களில் கூட மின்வசதி ஏற்படுத்தப்படவில்லை.

பிரம்மபுத்திரா போன்ற வற்றாத ஜீவ நதிகள் ஓடியும் அசாமில் குடிநீர் வசதி இல்லை. காங்கிரஸ் அரசே இதற்கு பொறுப்பு. ஏழைகளுக்கு வீட்டு வசதி செய்து தர மத்திய அரசு பணம் தருகிறது. ஆனால் அந்தப் பணம் பயன்படுத்தப்படாமல் வங்கி லாக்கர்களில் முடங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால் அசாம் வளரவே வளராது. அசாமில் எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது, ஆனால் ஏழைகள் சமையல் எரிவாயு பயன்படுத்துகின்றனரா? நாங்கள் 5 கோடி ஏழைகளுக்கு சமையல் எரிவாயு வழங்கவுள்ளோம்.

(சிஏஜி அறிக்கையை சுட்டிக் காட்டி) கோகாய் அரசு சிஏஜி கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை, பணம் எங்கே போனது? எனவே மக்கள் இதற்கான பதிலை ஏப்ரல் 4-ம் தேதி மின்னணு வாக்கு எந்திரத்தின் மூலம் அளிக்க வேண்டும்.

ஒரு பிரதமர் 2-3 திட்டங்களை பொத்தானை அழுத்துவதன் மூலம் நிறைவேற்றலாம். ஆனால் நீங்கள் மின்னணு வாக்கு எந்திரத்தில் அழுத்தும் பொத்தான் மூலம் வளர்ச்சியின் புதிய காலக்கட்டத்தை தேர்ந்தெடுக்கவுள்ளீர்கள். உங்கள் அதிகாரம் பிரதமரை விடவும் அதிகமானது.

60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளைச் சரி செய்ய நான் கேட்பது 5 ஆண்டுகளே.
என்னுடைய வார்த்தையைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இந்தத் தேர்தல் முடிந்த பிறகு குழந்தைகளுக்கு ‘A for Assam’ என்றே பாடம் புகட்டப்படும். தேர்தலுக்குப் பிறகு அசாமுக்கு இளம் முதல்வர் கிடைக்கப் போகிறார்.

இவ்வாறு பேசினார் மோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in