

கோடை விடுமுறையில் திருப்ப திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், அவர்களது வசதிக்காக திருப்பதி மலையடிவாரத்தில் இருந்து திருமலைக்கு 24 மணி நேரமும் பேருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருமலையில் கோடை விடுமுறைக் காக மேற்கொள்ளப் படும் வசதிகள் குறித்து நேற்று தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர் திருமலை தேவஸ்தான அதிகாரி சாம்பசிவ ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோடை காலம் தொடங்கி விட்டதால் நான்கு மாட வீதிகளிலும் வெப்பத்தை தடுக்கும் வர்ணம் பூசும் பணிகள் தொடங்கப்படும். சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் நான்கு மாட வீதிகளில் பக்தர்கள் வலம் வர வசதியாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றி வெப்பம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தரிசனத்துக்காக வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தாகம் தணிக்க குளிர்ந்த மோர், குடிநீர் வழங்கப்படும். விரைவில் கோடை விடுமுறையில் பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை திருப்பதி-திருமலை இடையே 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.