

இந்திய பாதுகாப்பு படைகளை வலுப்படுத்த ரூ.13,165 கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், வெடிபொருட்கள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்தவும், பலப்படுத்தவும் ரூ.13,165 கோடிக்கு அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள், பீரங்கி வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்முதல் திட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் (டிஏசி) ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் ரூ.11,486 கோடி மதிப்பிலான தளவாடங்கள், ஆயுதங்கள் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. குறிப்பாக 25 அதிநவீன இலகுரக மார்க் 3 ஹெலிகாப்டர்கள் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இரட்டை இன்ஜின், பலதிசைகளில் சுழலக்கூடிய உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர்கள் ரூ.3,850 கோடிக்கு கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் ரூ.4,962 கோடிக்குராக்கெட் வெடிகுண்டுகள் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்தும், பிற தளவாடங்கள் ரூ.4,353 கோடிக்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இவற்றில் ரூ.1700 கோடி மதிப்பிலான ஏவுகணைகள், ரூ.1,300 கோடி மதிப்பிலான 155மிமீ பீரங்கி வெடிகுண்டுகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலும் அடங்கும்.-பிடிஐ