

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வீடு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாருக்கு மேலிட தலைவர் ஆனந்த் சர்மா கண் டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரசில் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு பதிலாக நிரந்தரத் தலைவரை தேர்ந்தெடுக்க மூத்த தலைவர்கள் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்றோர் ஏற்கெனவே வலியுறுத்தி வருகின்றனர். பஞ்சாபில் காங்கிரஸில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன் தினம் கபில் சிபல் அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் என்று யாருமில்லை. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. கட்சியை விட்டு பல தலைவர்கள் வெளியேறுவது ஏன்? அவர்களை அழைத்து கட்சித் தலைமை பேச வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை டெல்லியில் கபில் சிபல் வீடு முன் டெல்லி நகர காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். கபில் சிபல் கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டனர். அழுகிய முட்டைகளையும் தக்காளிகளையும் வீசி அவரது காரையும் சேதப்படுத்தினர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘கபில் சிபல் வீடு முன் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி அவரது காரை சேதப்படுத்தியது அறிந்து அருவருப்பு அடைந்தேன். இதுபோன்ற நடவடிக்கைகள் கட்சியின் நற்பெயரை பாதிக்கும். காங்கிரஸாரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கட்சித் தலைவர் சோனியா கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும்’’ என்று கூறியுள்ளார்.