திருமலையில் ரூ.300 தரிசன டிக்கெட் கள்ளச் சந்தையில் விற்பனை: தேவஸ்தான ஊழியர் உட்பட 6 பேர் மீது வழக்கு

திருமலையில் ரூ.300 தரிசன டிக்கெட் கள்ளச் சந்தையில் விற்பனை: தேவஸ்தான ஊழியர் உட்பட 6 பேர் மீது வழக்கு
Updated on
1 min read

ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை 5 ஆயிரம் வீதம், 7 டிக்கெட்டுகள் ரூ.35 ஆயிரத்திற்கு பக்தர்களுக்கு விற்றதாக திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர், வங்கி ஊழியர் உட்பட 6 பேர் மீது திருமலை போலீஸார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது தினமும் சுமார் 22 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். இதில் 8 ஆயிரம் பேர் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொண்ட பக்தர்களாவர். மேலும் 8 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் சர்வ தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்துகொண்டவர்கள். இது தவிர, விஐபி பிரேக், வாணி அறக்கட்டளை டிக்கெட் மற்றும் சிபாரிசின் பேரில் ரூ.300 டிக்கெட்டுகளை பெற்று ‘சுபதம்’ வழியாக விரைவாக தரிசனம் செய்யும் பக்தர்கள் 6 ஆயிரம் பேர் உள்ளனர்.

தற்போது இந்த டிக்கெட்டு களைத்தான் பலர் விரும்பி வாங்குகின்றனர். இந்த டிக்கெட் டுகள் அறங்காவலர் குழு தலைவர், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சிபாரிசின் பேரில் வழங்கப்படுகிறது. விஐபி பிரேக் தரிசனம் என்றால் ஒரு நாள் திருமலையில் தங்க வேண்டியுள்ளது. ஆனால், இந்த சுபதம் வழியாக தரிசனம் என்றால், வெறும் அரை மணி நேரத்தில் சுவாமியை தரிசித்து விட்டு வெளியே வந்து விடலாம். இதன் காரணமாக தற்போதைய புரட்டாசி மாதத்தில் சுபதம் டிக்கெட்டுகள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனை அறிந்த தேவஸ்தான கண்காணிப்பு பிரிவினர், இடை தரகர்களை கைது செய்ய தீர்மானித்தனர். அதன்பேரில், சுபதம் வழியாக தரிசன டிக்கெட்டு கள் கொண்டு வருவோரில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், கடந்த 23-ம் தேதி வெளியூரிலிருந்து வந்த பக்தர்களுக்கு ரூ.300 டிக்கெட்டை ஒரு டிக்கெட் ரூ.5000 வீதம் 7 டிக்கெட்டுகள் ரூ.35 ஆயிரத்திற்கு தேவஸ்தான ஊழியர் மூலமாக வங்கி ஊழியர் ஒருவர் பக்தர்களுக்கு விற்று உள்ளார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய விஜிலென்ஸ் பிரிவினர் மொத்தம் 6 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர். இதுபோன்று, மேலும் பல டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் விற்றிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதனால் மேலும் பல தேவஸ்தான ஊழியர்கள், இடைத்தரகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in