Published : 30 Sep 2021 14:56 pm

Updated : 30 Sep 2021 15:01 pm

 

Published : 30 Sep 2021 02:56 PM
Last Updated : 30 Sep 2021 03:01 PM

‘‘காங்கிரஸை விட்டு விலகுவேன்; பாஜகவில் சேரவில்லை: அடுத்தது என்ன?’’- கேப்டன் அமரீந்தர் சிங் மனம் திறந்தபேட்டி

amarinder-singh-not-joining-bjp-but-won-t-remain-in-congress

புதுடெல்லி

பாஜகவில் நான் சேரவில்லை ஆனால் கண்டிப்பாக காங்கிரஸை விட்டு விலகுவேன் என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறினார்.

பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவையடுத்து அண்மையில் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாபின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தார்.

இதனிடையே கட்சி மேலிடத்துடன் அதிருப்தியில் இருந்த அமரீந்தர் சிங் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அவர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில் நேற்று டெல்லி சென்றார்.

டெல்லியில் நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை அவரது வீட்டில் அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்தது.

இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அமரீந்தர் சிங் இன்று காலை சந்தித்தார். பஞ்சாப் மாநிலத்தின் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் அவர் பஞ்சாப் எல்லை பாதுகாப்பு குறித்து விவாதித்திருக்கலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தநிலையில் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அமரீந்தர் சிங் விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் "இதுவரை நான் காங்கிரஸில் இருக்கிறேன் ஆனால் நான் காங்கிரஸில் தொடர்ந்து இருக்க மாட்டேன். நான் ஏற்கெனவே எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டேன். அதேசமயம் பாஜகவில் சேர மாட்டேன்’’ எனக் கூறினார்.

தொடர்ந்து அமரீந்தர் சிங் கூறியுள்ளதாவது:

நான் 52 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எனக்கு சொந்த நம்பிக்கைகள், சொந்த கொள்கைகள் உள்ளன. நான் நடத்தப்பட்ட விதம் வருத்தமளிக்கிறது.

நான் எந்த கேள்வியும் கேட்கவில்லை. நான் செய்வேன் என்றேன். அதன்படி நான் ஆளுநரிடம் சென்று ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தேன். 50 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் என்னை சந்தேகித்தால், என் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருந்தால் என்ன செய்வது?

நம்பிக்கை இல்லாவிட்டால், நான் கட்சியில் இருப்பதன் பயன் என்ன? நான் இந்த விதத்தில் நடத்த இனிமேலும் அனுமதிக்க மாட்டேன் என்று காங்கிரஸுக்கு எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளேன். அதற்காக நான் அத்துடன் நிற்க மாட்டேன். நான் காங்கிரஸில் இருந்து இதுவரை விலகவில்லை, ஆனால் நம்பிக்கை இல்லாத இடத்தில் ஒருவர் எப்படி தொடர முடியும்?

நம்பிக்கை இல்லாதபோது ஒருவர் தொடர முடியாது. அமித் ஷாவைச் சந்தித்த பிறகு காங்கிரஸ் உட்பட அனைவரும் என்னிடம் எழுப்பும் கேள்வி நான் பாஜகவில் சேருவேனா என்பதே.

நான் பாஜகவில் சேரவில்லை. நான் காங்கிரஸில் இருந்து இதுவரை விலகவில்லை ஆனால் நான் விரைவில் ராஜினாமா செய்வேன். நான் இரண்டாவதாக முடிவுகளை எடுக்கும் நபர் அல்ல.

சித்து ஒரு முதிர்ச்சியற்ற நபர். அவர் ஒரு நிலையான எண்ணம் கொண்ட மனிதர் அல்ல என்று நான் மீண்டும் மீண்டும் கூறினேன். அவர் ஒரு அணிக்கு ஏற்ற தலைவர் அல்ல. அவர் ஒரு தனிமையானவர். பஞ்சாப் காங்கிரஸை அதன் தலைவராக அவர் எப்படி நடத்துவார்.

சித்து ஒரு காட்சியை உருவாக்குவதில் வல்லவர். கபில் ஷர்மாவின் நிகழ்ச்சியில் அவர் செய்ததை மறக்க முடியுமா? இதுபோன்று எப்போதாவது ஒரு கூட்டத்தைப் பெற முடியும். ஆனால் அவர் ஒரு தீவிரமாக செயல்படக் கூடிய நபர் அல்ல. ஒரு கட்சியையும், மாநில அரசையும் நடத்துவதில் தீவிரமான, முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். அவரால் நாடகங்களை மட்டுமே செய்ய முடியும்.

ராகுல் காந்தி கட்சிக்கு இளம் ரத்தத்தை கொண்டு வர விரும்புகிறார். அதனால் பழைய தலைவர்களின் ஆலோசனையை கேட்க மறுக்கிறார். கட்சியில் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸுக்கு அழிவு ஏற்படும்.

தற்போதைய சூழ்நிலையில், காங்கிரஸ் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சி மக்கள் ஆதரவை பெற்று வருவது தெரிய வந்துள்ளது/. காங்கிரஸ் வீழ்ச்சியடைவதை நாம் காண்கிறோம். மக்கள் ஆதரவு காங்கிரஸுக்கு குறைந்து வருகிறது. அந்த கணிப்பில் காங்கிரஸ் 20 சதவீத சரிவைக் கண்டுள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் வித்தியாசமாக இருக்கும். காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகாலிதளம் அல்லாமல் மேலும் மற்றொரு முன்னணி உருவாகலாம். எனவே, இது மிகவும் வித்தியாசமான தேர்தலாக இருக்கும்.

இவ்வாறு அமரீந்தர் சிங் கூறினார்.


தவறவிடாதீர்!புதுடெல்லிபாஜககாங்கிரஸ்அடுத்தது என்னகேப்டன் அமரீந்தர் சிங்CongressBJPAmarinder Singh

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x