

கேரள மாநிலம், கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வல்கர், தீனதயாள் உபாத்தியாயா உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டதால் சர்ச்சை எழுந்ததை அடுத்து, தற்போது முகமது அலி ஜின்னா, பெரியார் ஆகியோரின் சித்தாந்தங்கள் சேர்க்கப்பட உள்ளன.
கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் அண்மையில் முதுகலை எம்ஏ பட்டப் படிப்பிற்கான மூன்றாவது செமஸ்டர் பாடத் திட்டத்தில் புதிதாகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ சிந்தனையாளர்களான கோல்வல்கர், சாவர்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரைப் பற்றி பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் படிப்பு தலசேரியில் உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் கற்பிக்கப்பட்டது. இதற்கு மாணவர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
கேரள மாணவர் சங்கம், காங்கிரஸ் மாணவர் பிரிவு, முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் பிரிவு ஆகியோர் பாடத்திட்டத் தாள்களை நகலெடுத்து, அவற்றை எரித்துத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். எனினும் புதிய பாடத்திட்டத்தின் மூலம் காவிமயமாக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் மறுப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ''அரசியல் சிந்தனைகள் மற்றும் வரலாற்றைப் படிக்கும்போது அதன் அனைத்துப் பக்கங்களும் விவாதிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய, கேரளப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சார்பு துணைவேந்தரான பிரபாஷ் தலைமையில் இரு நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், 'நவீன அரசியல் சிந்தனையில் இந்தியா' என்னும் பாடத்தில் இருந்து தீனதயாள் உபாத்தியாயா, பால்ராஜ் மதோக் ஆகியோரின் தகவல்கள் நீக்கப்பட உள்ளன. சாவர்க்கர், கோல்வால்கர் ஆகியோர் குறித்த தகவல்கள் பாடத்திட்டத்தில் தொடர்ந்து நீடிக்கும்.
அதேபோல, இஸ்லாமிய, திராவிட, காந்தியக் கொள்கைகளையும் பாடத்திட்டத்தில் சேர்க்க பாடத்திட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி மெளலான அபுல் கலாம் ஆசாத், முகமது அலி ஜின்னா மற்றும் ஈவேரா பெரியார் ஆகியோரின் சித்தாங்களைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசவிரோதக் கருத்துகளைத் தெரிவித்தல், மாணவர்கள் மத்தியில் போதித்தல் போன்றவை கூடாது என்று அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் காசர்கோட்டில் உள்ள கேரள மத்தியப் பல்கலைக்கழகம் அண்மையில் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.