Last Updated : 30 Sep, 2021 09:22 AM

 

Published : 30 Sep 2021 09:22 AM
Last Updated : 30 Sep 2021 09:22 AM

நிபா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறன் வவ்வால்களில் இருக்கிறது: கேரள சுகாதார அமைச்சர்

நிபா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்புத்திறன் அதனைப் பரப்பும் வவ்வால்களிடமே இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார் கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ்.

உலகையே கரோனா வைரஸ் ஆட்கொண்டுள்ள நிலையில், கேரளாவில் இன்னும் கரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்தியாவில் அன்றாடம் பதிவாகும் கரோனா பாதிப்பில் 50%க்கும் மேலான பாதிப்பு கேரள மாநிலத்தில் மட்டுமே பதிவாகிறது.

இந்நிலையில் செப்டம்பர் தொடக்கத்தில் அங்கு நிபா வைரஸும் பரவத் தொடங்கியது. கடந்த 5 ஆம் தேதி (செப்டம்பர் 5) 12 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் பாதித்து உயிரிழந்தார். இதனையடுத்து மத்தியக் குழு கேரளா சென்றது. அங்கு பல்வேறு ஆய்வுகளும் மேற்கொண்டது. நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் மாநில அரசுக்கு வழங்கியது.

கேரள அரசு மேற்கொண்ட ஆய்வில், ரம்புட்டான் பழத்தினை சிறுவன் உட்கொண்டதும் அதன் வாயிலாகவே சிறுவனுக்கு நிபா தொற்று ஏற்பட்டதும் உறுதியானது. அந்தச் சிறுவன் ரம்புட்டான் பழத்தை வாங்கிய பகுதியிலிருந்த ரம்புட்டான் பழங்களில் வவ்வால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியதும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர், சில வவ்வால்களின் உடலில் இருந்து சில மாதிரிகளை சேகரித்துச் சென்றது. அந்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நிபா வைரஸுக்கு எதிரான நோய்த்திறன் அதனைப் பரப்பும் வவ்வால்களின் உடலிலேயே இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனை சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார். இது குறித்து ஐசிஎம்ஆர் மேலும் சில ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

கரோனா வைரஸ், நிபா வைரஸ் என அடுத்தடுத்து தாக்கும் உயிர்க்கொல்லி நோய்கள் வவ்வால்கள் மூலமே பரவுவதாகக் கூறப்படுவதால் அவற்றின் மீது வெறுப்புப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு வன உயிர் ஆர்வலர்கள் கடும் கண்டனமும் வருத்தமும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நிபா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடியும் வவ்வால்களின் உடலிலேயே இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி ஆறுதல் அளிப்பதாக உள்ளது என வன உயிர் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கரோனா வைரஸ் கட்டுப்பாடு குறித்துப் பேசிய அவர், இதுவரை கேரளாவில் 18 வயதுக்கும் மேற்பட்டோர் 91.9% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x