Published : 30 Sep 2021 07:43 AM
Last Updated : 30 Sep 2021 07:43 AM

அவமதிப்பு வழக்கில் நீதிமன்ற அதிகாரத்தை சட்டம் இயற்றுவதால் கூட பறிக்க முடியாது: ராஜிவ் தய்யாவுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி

அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை சட்டம் இயற்றுவதன் மூலம் கூட பறிக்க முடியாதுஎன்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுராஜ் இந்தியா அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் ராஜிவ் தய்யா. நீதிபதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்து வந்தார். இந்த வழக்குகளில் உண்மைத் தன்மை இல்லை என்று பலமுறை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கண்டனம் தெரிவித்தது.

ஏற்கெனவே, 2017-ம் ஆண்டில்அவருக்கு ரூ.25 லட்சம் அபராதத்தையும் உச்ச நீதிமன்றம் விதித்தது. தன்னிடம் பணம் இல்லை என்று கூறி அந்தத் தொகையை ராஜீவ் தய்யா கட்டவில்லை. குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பப் போவதாகவும் தெரிவித்தார். தய்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டது. எனினும், கடந்த 8-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின்போது நிபந்தனையற்ற மன்னிப்பு கோருமாறு தய்யாவுக்கு உச்ச நீதிமன்றம் 3 நாட்கள் அவகாசம் வழங்கியது. அவர் மன்னிப்பு கோரவில்லை.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகவே ராஜிவ் தய்யாவை கருதுகிறோம். நீதிமன்றத்தின் மீது அவதூறு கூறி நீதிமன்றத்தின் மதிப்புமிக்க நேரத்தை அவர் வீணடித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிமன்றம், நிர்வாகம், மாநில அரசு மீது ராஜிவ் தய்யா சேறு வீசுகிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கும் அதிகாரத்தை சட்டமன்றம் மூலம் சட்டம் இயற்றுவதால் கூட பறிக்க முடியாது. இது அரசியல் சாசனப்படி உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமாகும்’’ என்றனர்.

தண்டனை வழங்குவது தொடர்பான விசாரணைக்காக அக்டோபர் 7-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக ராஜிவ் தய்யாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x