குஜராத் கடற்பகுதியில் புதிய புயல் ‘ஷாகீன்’- பாகிஸ்தான் நோக்கி செல்லக் கூடும் என கணிப்பு

குஜராத் கடற்பகுதியில் புதிய புயல் ‘ஷாகீன்’- பாகிஸ்தான் நோக்கி செல்லக் கூடும் என கணிப்பு
Updated on
1 min read

குஜராத் கடற்பகுதியில் ‘ஷாகீன்’ என்ற புதிய புயல் நாளை (அக்.1) காலைக்குள் உருவாகி பாகிஸ்தானை நோக்கி செல்லக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயலானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திர பிரதேசத்தில் கரையை கடந்தது. இப்புயலில் எச்சங்கள் தெலங்கானா, மகாராஷ்டிரா முழுவதும் நகர்ந்து, நேற்று தெற்கு குஜராத் மீதிருந்தன.

இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் இவை காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறி, மேற்கு, வடமேற்கு திசையில் நகரும். பிறகு இது வெள்ளிக்கிழமை (அக்.1) காலைக்குள் வட அரபிக் கடலில் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இப்புயலுக்கு கத்தார் நாடு அளித்த பரிந்துரையின்படி ‘ஷாகீன்’ என பெயரிடப்பட்டுள்ளது.இப்புயல் பாகிஸ்தான் நோக்கி செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு நேரடி அச்சுறுத்தல் இல்லை. என்றாலும் இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளின் மீனவர்கள் அக்டோபர் 2 வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் 3 நாட்களுக்கு மகாராஷ்டிரா, குஜராத் கடற்பகுதி கொந்தளிப்புடன் காணப்படும். 55 முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ‘தவுக்தே’ புயலுக்குப் பிறகு அரபிக் கடலில் உருவாகும் இரண்டாவது புயல் இதுவாகும்.

இதனிடையே குஜராத்தின் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. வடக்கு கொங்கன், குஜராத் கட்ச், சவுராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இன்று அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in