

நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிய யோசனை ஏதும் இல்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். பட்ஜெட் குறித்து மேலும் அவர் கூறியதாவது.
இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கியமான அம்சமே அடுத்த ஐந்தாண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயர்த்தப்படும் என்ற அறிவிப்புதான். ஆனால் இது நிறைவேறாத கனவாகவே இருக்கும். ஐந்தாண்டுகளில் இரு மடங்காக வேண்டும் என்றால் ஒவ்வொரு வருடமும் 14 சதவீத வளர்ச்சி இருக்க வேண்டும். ஆனால் இந்த வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது அறிக்கப்படவில்லை. அதே சமயம் நிதிப்பற்றாக்குறை இலக்கில் தீர்மானமாக இருப்பது வரவேற்கக்கூடியது என்றார்.
இந்திய பொருளாதார சீர்த்திருத்தங்களை 1990-களில் தொடங்கி வைத்தவர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார்.
2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. விவசாயிகளின் மேம்பாட்டுக் காக 35,984 கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல கிராமபுற மேம்பாட்டுக்காக 87,765 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மாநில தேர்தல்களை முன்னிட்டு விவசாயத்துக்கு முக்கியத் துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்கிற விமர்சனமும் எழுந்திருக்கிறது.