

நாடு முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய உணவுத் திட்டத்தின் பெயர் பிரதமர் போஷான் திட்டம் என மாற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதியம் சமைக்கப்பட்ட சூடான உணவுகளை வழங்க மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் என்று அழைக்கப்பட்டது, இனிமேல் பிரதமர் போஷான் சக்தி நிர்மான் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தால் நாடு முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் பயிலும் 11.80 கோடி மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
பிரதமர் போஷான் திட்டத்துக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மதியம் தோறும் வழங்கப்பட்டு வந்த மதிய உணவுத் திட்டம் இனிமேல் பிரதமர் போஷான் என்று அழைக்கப்படும். இந்தத் திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1,30,794 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில் மத்திய அரசு சார்பில் ரூ.54,061.71 கோடியும், மாநில அரசுகள் சார்பில் ரூ.31,733.17 கோடியும் ஒதுக்கப்படும்.
மாணவர்களுக்கு உணவுக்காக வழங்கப்படும் உணவு தானியங்களுக்காக கூடுதலாக ரூ.45 ஆயிரம் கோடி செலவை மத்திய அரசு ஏற்கும். ஒட்டுமொத்த திட்டத்தின் மதிப்பு ரூ.1.30 லட்சம் கோடியாகும்”.
இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படும் அங்கன்வாடிகள், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்தத் திட்டத்தில் என்னென்ன சத்தான சரிவிகித உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்பதை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானிக்கும், மத்திய அரசு தீர்மானிக்காது. இந்தத் திட்டத்தில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள்.