காபூலுக்குப் பயணிகள் விமானப் போக்குவரத்து; இந்தியாவுக்குத் தலிபான்கள் கோரிக்கை: மத்திய அரசு ஆலோசனை

படம் | ஏஎன்ஐ.
படம் | ஏஎன்ஐ.
Updated on
1 min read

ஆப்கன் தலைநகர் காபூல் நகருக்குப் பயணிகள் விமான சேவையைத் தொடங்குங்கள் என இந்திய விமானக் கட்டுப்பாட்டு இயக்குநகரத்துக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் தலைமையிலான அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியோடு காபூல் நகருக்கு இந்தியா சார்பில் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பின் காபூல் விமான நிலையம் மூடப்பட்டது. இந்நிலையில் கடந்த 5-ம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியது. கடந்த 13-ம் தேதி சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கியது. பாகிஸ்தான் அரசு முதன்முதலில் ஆப்கனுக்கு விமான சேவையைத் தொடங்கியது.

இந்நிலையில் தலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை, இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில், “இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு இஸ்லாமிய எமிரேட் ஆப்கானிஸ்தான் விமானப் போக்குவரத்துத் துறை வாழ்த்து தெரிவிக்கிறது.

அமெரிக்கப் படைகள் புறப்படுவதற்கு முன் காபூல் விமான நிலையம் சேதமடைந்துள்ளதாக சமீபத்தில் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். கத்தார் அரசின் உதவியால் காபூல் விமான நிலையம் சரிசெய்யப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்தக் கடிதத்தின் நோக்கம் இரு நாடுகளுக்கு இடையே சுமுகமான விமானப் போக்குவரத்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இருக்க வேண்டும் என்பதையே குறிக்கிறது. எங்களின் எரினா ஆப்கன் ஏர்லைன்ஸ் அண்ட் கம் ஏர் விமானப் போக்குவரத்தைத் தொடங்கவுள்ளது. ஆதலால், மீண்டும் காபூல் நகருக்கு விமானப் போக்குவரத்தை இயக்குங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கடிதம் தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “தற்போதுள்ள நிலவரப்படி காபூல் நகருக்கு விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்குவது குறித்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம், விமானப் போக்குவரத்து அமைச்சகம், வெளியுறவுத்துறை ஆகியவை இணைந்து முடிவு செய்யும்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in