சித்து ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் மேலிடம் மறுப்பு: கடும் அதிருப்தியால் நடவடிக்கை பாயும்

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி | கோப்புப் படம்.
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி | கோப்புப் படம்.
Updated on
2 min read

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத் சிங் சித்துவின் நடவடிக்கையால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கும், சித்துவுக்கும் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதல் முற்றியதையடுத்து, காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். ஆனால், சித்து தலைவராக நியமிக்கப்பட்ட சில வாரங்களில் முதல்வர் பதவியை அமரிந்தர் சிங் ராஜினாமா செய்தார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பமும், மோதலும் ஏற்பட்டுள்ளது கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும்போது, பாஜகவில் இணையப் போவதாகவும், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதை அமரிந்தர் சிங் வட்டாரங்கள் மறுத்துவிட்டன.

இந்தப் பரபரப்பான சூழலில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் பதவி விலகி, சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில், “ஒரு மனிதனின் குணத்தின் சரிவு சமரசத்தில் இருந்து வருகிறது. பஞ்சாப்பின் எதிர்காலம் மற்றும் பஞ்சாப்பின் நலன் குறித்த விஷயத்தில் நான் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது. எனவே, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். காங்கிரஸுக்குத் தொடர்ந்து சேவை செய்வேன்" என்று சித்து தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமரசம் என்ன என்பது பற்றி அவர் விளக்கவில்லை.

புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சித்துவுக்கு நெருக்கமானவராக இருந்தபோதிலும், பஞ்சாப் அமைச்சரவை மாற்றம் உள்ளிட்ட சில முடிவுகளில் சித்துவிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சித்து அனுப்பிய ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் மேலிடம் உடனடியாக ஏற்கவில்லை. அவரிடம் பேசவும் நேரம் ஒதுக்கவில்லை. சித்துவிடம் சிறிது காத்திருங்கள், அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம் என்று காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவுகளை சித்து மதிக்காமல் ராஜினாமா முடிவில் பிடிவாதமாக இருந்தால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கட்சி தயாராக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சித்து விலகியது, மாநில காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிக்கலை மேலும் ஆழமாக்கியுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் கடும் அதிருப்தியில் இருக்கிறது. அடுத்த ஆண்டு மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி சந்திக்க இருக்கும் நிலையில் இதுபோன்ற உட்கட்சிக் குழப்பங்கள் கட்சியின் வெற்றியைப் பாதிக்கும் என்றும் மேலிடம் கருதுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in