

இந்துத்துவா எனும் சித்தாந்த முறை அனைவரையும் அழைத்துச் செல்கிறது, ஒன்றாக இணைக்கிறது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு 3 நாட்கள் பயணமாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வந்திருந்தார். சூரத் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மோகன் பாகவத் பேசியதாவது:
''இந்துத்துவா எனும் சித்தாந்த முறை ஒவ்வொருவரையும் அழைத்துச் செல்கிறது, ஒன்றாக இணைக்கிறது. அனைவரையும் தனக்குள் இணைத்து, அனைவரையும் செழிப்பாக்குகிறது. சில நேரங்களில் எழும் கருத்து முரண்பாடுகளையும் இந்துத்துவா அகற்றுகிறது. ஆனால், இந்துத்துவா என்பது முரண்பாடானது அல்ல.
இதை இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், தடைகளை அகற்றுவதற்கு தேவையான சக்தி பற்றியும் இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இதைத்தான் உலகம் புரிந்துகொள்கிறது. நாம் சக்தி வாய்ந்தவர்களாக உருவாக வேண்டும்.
ஆனால், அந்த சக்தி கொடுங்கோன்மையை ஒருபோதும் குறிக்காது. இது மதத்தைப் பாதுகாக்கும் போது உலகை ஒன்றிணைக்கும். தனிநபர்கள் சேர்ந்த சமூகம் பொதுவான கலாச்சாரம் மற்றும் நோக்கங்களில் இணைக்கப்படுவதுதான் தேசம்”.
இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.
இதற்கிடையே குஜராத்தில் 3 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு இன்று புறப்படுகிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4 நாட்கள் பயணம் செய்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் ஆகியோரைச் சந்தித்து மோகன் பாகவத் பேச உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் மோகன் பாகவத் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ஆர்எஸ்எஸ் வழக்கத்தின்படி ஆண்டுதோறும் சர்சங்கசாலக் மற்றும் சர்கார்யாவா என்ற முறைப்படி அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்து, பிரபலமானவர்களைச் சந்தித்துப் பேச வேண்டும்.
இதற்கு முன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு மோகன் பாகவத் சென்றிருந்தார். அன்பின் நாளை பயணம் மேற்கொள்கிறார். ஜம்மு பல்கலைக்கழதத்தில் உல்ள ஜெனரல் ஜோராவர் கலையரங்கத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூட்டத்தில் பேசவுள்ளார்.
ஆர்எஸ்எஸ் சார்பில் ஜம்மு காஷ்மீரில் மேற்கொண்டுவரும் திட்டங்கள், சேவைகள், கல்விச் சேவைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சுகாதாரத் திட்டங்கள், கிராமப்புற மேம்பாடு, நீர் மேலாண்மை, சமூக சமத்துவத் திட்டம் ஆகியவை குறித்து ஆலோசிக்க உள்ளார்.
மேலும் ஆர்எஸ்எஸ் தன்னார்வலர்களுடன் காணொலி மூலம் வரும் 3-ம் தேதி மோகன் பாகவத் கலந்துரையாடல் நடத்துகிறார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள மூத்த, குறிப்பிட்ட நிர்வாகிகளுடனும் மோகன் பாகவத் ஆலோசனை நடத்த உள்ளார்.