Last Updated : 29 Sep, 2021 10:10 AM

 

Published : 29 Sep 2021 10:10 AM
Last Updated : 29 Sep 2021 10:10 AM

இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடைவேன்: ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ்

இந்தியாவை இந்து ராஷ்ட்ரமாக (இந்து தேசமாக) அறிவிக்க வேண்டும்; இல்லாவிட்டால் ஜலசமாதி அடைவேன் என எச்சரித்துள்ளார் ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ்.

உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு மடங்களும் மடாதிபதிகளும் இருக்கின்றனர். அவர்களின் சிலர் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக திகழ்கின்றனர். கரோனா 2வது அலையின் போது கும்பமேளாவை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது இத்தகைய மடாதிபதிகளை மீறி அரசால் எதுவும் செய்ய முடியாத சூழலே நிலவியது.

இந்நிலையில், பலம் வாய்ந்த ஜீயர்களில் ஒருவரான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ், இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்காவிட்டால் ஜலசமாதி அடையப்போவதாதக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "வரும் அக்டோபர் 2ஆம் தேதிக்குள் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால் நான் சரயு நதியில் ஜல சமாதி அடைவேன்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் 15 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டமாக அவர் அதனை மேற்கொண்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரை சந்தித்ததையடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

உத்தரப் பிரதேசம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் அதில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில் உ.பி.யைச் சேர்ந்த முக்கிய ஜீயர்களில் ஒருவரான ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உ.பி, தேர்தலைப் பொருத்தவரையில் மடாதிபதிகளின் ஆதரவும் கட்சிக்கு முக்கியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x