

பாஜகவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாகிய முகுல் ராய் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததற்கு எதிராக சுவேந்து அதிகாரி அளித்த மனு மீது அக்டோபர் 7-ம் தேதிக்குள் மே.வங்க சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்த முகுல் ராய், தேர்தலுக்கு முன் பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு தேசியத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. மே.வங்க இடைத்தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு பாஜக சார்பில் வெற்றி பெற்றார்.
மே.வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 3-வது முறையாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இதைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏ முகுல் ராய் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்த முகுல் ராய் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக எம்எல்ஏவும், எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, சபாநாயகர் பிமான் பானர்ஜியிடம் கடந்த ஜூன் 18-ம் தேதி மனு அளித்திருந்தார். ஆனால், இதுவரை சபாநாயகர் முகுல் ராய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நேற்று இரவு அவசரமாக ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ''கட்சித் தாவல் தொடர்பான புகார் மனு அளித்தால் 3 மாதத்துக்குள் சபாநாயகர் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், முகுல் ராய் பாஜகவில் சேர்ந்து வெற்றி பெற்று தற்போது திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்துவிட்டார். அவர் மீது கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜூன் 18-ம் தேதி மனு அளித்தும் இதுவரை சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை.
சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் சட்டப்பேரவை பொதுக்கணக்குக் குழுவில் இருந்தும் முகுல் ராயை நீக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் பிந்தால், ராஜர்ஸி பரத்வாஜ் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ சுவேந்து அதிகாரி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், முகுல் ராய் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி அக்டோபர் 7-ம் தேதிக்குள் மே.வங்க சபாநாயகர் பிமான் பானர்ஜி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு மனு மீது முடிவு எடுக்கத் தவறும்பட்சத்தில் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க நேரிடும்” எனத் தெரிவித்தனர்.