

கேரளத்தின் கொல்லம் பகுதி யைச் சேர்ந்தவர் ஹரி. இவர் பிழைப்புக்காக தன் சொந்த ஊரில் இருந்த விவசாய நிலங்களை விற்றுவிட்டு திருவனந்தபுரத்தில் குடியேறினார். வேறு தொழில்செய்து வருவாய் ஈட்டிவந்தாலும் விவசாய நிலத்தை விற்ற துயரம் அவரை துரத்தியது.
இதனால் திருவனந்தபுரம் அருகில் உள்ள புளியரக்கோணம் பகுதியில் விவசாயம் செய்யும் ஆர்வத்துடன் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கினார். அப்பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக் குறையும் நிலவியது.
இதுகுறித்து இந்து தமிழ் திசையிடம் ஹரி கூறும்போது “12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தநிலத்தை வாங்கினேன். ஆர்வத்துடன் மரம், செடிகளை நட்டு வந்தேன். ஆனால் கோடையில் அவை வாடி உதிர்ந்துவிடும். மீண்டும் மறுநடவு, தோல்வி என்றே காலம் ஓடியது. இப்படியான சூழலில் தான் ஜப்பானின் மியாவாகி தொழில்நுட்பம் பற்றி தெரியவந்தது. ஜப்பானிய தாவரவியலாளர் அகிரா மியாவாகிதான் இந்தத் தொழில்நுட்பத்தை முன்னெடுத்தவர். நகர்ப்புறங்களில் குறுங்காடுகள் வளர்ப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.
மியாவாகி தொழில்நுட்பத்தில் மரங்களை வளர்க்கும்போது சாதாரண நிலையை விட 10 மடங்குவேகமாகவும், 30 மடங்கு அடர்த்தியாகவும் அவை வளர்கின்றன. இப்போது எனது 3 சென்ட் வனத்தில் ஏராளமான மூலிகை வளங்களும் கொட்டிக் கிடக்கின்றன. நான் இந்த நிலத்தை வாங்கும்போது இங்கே ஒரு குளமும் இருந்தது. அந்தக் குளத்தை சுத்தம் செய்தபோது மண்ணில் இருந்த நுண்துளைகள் வழியாக தண்ணீர் ஓடிவிட்டது. மீண்டும் தண்ணீர் ஊறவே இல்லை.
இத்தனை இடர்களுக்கு மத்தியில் தான் ஐப்பானிய மியாவாகிதொழில்நுட்பம் கைகொடுத்துள் ளது. இந்த முறையில் மரங்களை இடைவெளி இல்லாமல் மிகவும் நெருக்கமாக நடவேண்டும். இதில்மரங்கள் சூரிய ஒளியை கிரகிப்பதற்காக ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு வளர்கின்றன. நான் ஒரு சின்னக்காட்டை உருவாக்க செடி, கொடி, மரம் என பலவற்றை நடவு செய்தேன். பதினெட்டே மாதங்களில் இந்த இடம் 400 மரங்களுடன் பசுமையான சோலையாக மாறிவிட்டது” என்றார் அவர்.