Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM

கோவா, கேரள மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விலகல்

கோவா மற்றும் கேரளாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இருவர் நேற்று அக்கட்சியை விட்டு விலகியுள்ளனர்.

கோவா மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக பதவி வகித்தவர் லூசினோ பெலிரோ. கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் குழுக்களை காங்கிரஸ் நியமித்துள்ளது. இவற்றின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக பெலிரோ அண்மையில் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பெலிரோ நேற்று காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியதுடன் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். முன்னதாக அவர் தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘பிரதமர் மோடிக்கு சவால் விடுக்கும் ஒரே தலைவர் மம்தா மட்டுமே. மேற்கு வங்க தேர்தலில் மோடி 200 கூட்டங்களை நடத்தினார். அமித்ஷா 250 கூட்டங்களை நடத்தினார் அத்துடன் அமலாக்கத்துறை, சிபிஐ கெடுபிடியும் மம்தாவுக்கு இருந்தது. ஆனால் இத்தனையும் மீறி மம்தா வெற்றி பெற்றுள்ளார். அவரது பார்முலா வெற்றி பெற்றுள்ளது” என்றார்.

இந்நிலையில் பெலிரோ திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிணமூல் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன், பிரசும் பானர்ஜி ஆகியோர் கோவாவில் உள்ளனர். இவர்கள் பெலிரோவை சந்தித்துப் பேசவுள்ளனர்.

உ.பி., உத்தராகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுடன் கோவாவும் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸை விட்டு பெலிரோ விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

வி.எம்.சுதீரன் விலகினார்

கேரளாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் வி.எம்.சுதீரன் நேற்று கட்சியை விட்டு விலகினார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார்.

கேரளாவுக்கு பொறுப்பான காங்கிரஸ் பொதுச் செயலாளர் தாரிக் அன்வர், அண்மையில் திருவனந்தபுரத்தில் இருந்தபோது, கேரள காங்கிரஸ் தலைமையுடன் சுதீரனுக்கு மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் கேரள காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரக் குழுவில் இருந்து சுதீரன்விலகினார். தற்போது அவர் கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.

கேரளாவில் அண்மையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக முன்னாள் பொதுச் செயலாளர் கே.பி.அனில் குமார், கட்சி செயலாளர் பி.எஸ்.பிரசாந்த் ஆகியோர் கட்சியில் இருந்து விலகினர். அனில் குமார் பின்னர் மார்க் சிஸ்ட் கட்சியில் இணைந்தார். தற்போது சுதீரன் காங்கிரஸை விட்டு விலகியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x