

பிரதமர் மோடியை தெருவில் நின்று எதிர்க்கும் ஒரே தலைவர் மம்தா பானர்ஜி என புகழ்ந்த கோவா முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான லூசினோ பெலிரோ எல்எல்ஏ பதவியில் இருந்தும், அக்கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.
கோவா மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக பதவி வகித்தவர் லூசினோ பெலிரோ. அவர் அண்மையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசினார். அவர் பேசுகையில் ‘‘பிரதமர் மோடிக்கும் அவரது அதிகாரத்துக்கும் கடும் சவால் விடுக்கும் ஒரே தலைவர் மம்தா பானர்ஜி. பிரதமர் மோடி சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் 200 கூட்டங்களை நடத்தினார்.
அமித் ஷா 250 கூட்டங்களை நடத்தினார். அத்துடன், அமலாக்கத்துறை, சிபிஐ கெடுபிடியும் இருந்தது. ஆனால், மம்தா பார்முலா வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடியை தெருவில் நின்று எதிர்க்கும் ஒரே தலைவர் மம்தா பானர்ஜி மட்டுமே’’ எனக் கூறினார்.
காங்கிரஸில் இருந்து கொண்டு வேறு ஒரு கட்சித் தலைவர் ஒருவரை புகழ்ந்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் லூசினோ பெலிரோ தனது எல்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவை செயலாரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதுமட்டுமின்றி லூசினோ பெலிரோ காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலத்திலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. லூசினோ திரிணாமுல் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.