

வங்கக் கடலில் உருவான குலாப் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காலை உருவானது. இது, சனிக்கிழமை காலை மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்தது.
பின்னர் இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு குலாப் எனப் பெயரிடப்பட்டது. இந்த புயல் நேற்று ஒடிசா மாநிலம் கோராபுட் அருகே கரையை கடைந்தது. இதனைத் தொடர்ந்து இந்த புயல் வலுவிழுந்தது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
கிழக்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த குலாப் புயல் நேற்று இரவு கரையை கடந்தது. இதனால், கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதன்பின்னர் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்தது. இது இன்று அதிகாலையில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவில் நிலைகொண்டிருந்தது. தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.