

தசரா பண்டிகை முடிந்தபின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடியாகத் தொடங்க வாய்ப்புள்ளது என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்டு பொது முடக்கம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை முறை ரத்து செய்யப்பட்டது. வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இப்போது கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து, விசாரணையை நேரடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. இதைப் பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு, முதல் கட்டமாக குறிப்பிட்ட சில வழக்குகளை மட்டும் நேரடியாக விசாரிக்கலாம் எனப் பரிந்துரை வழங்கியது.
இதையடுத்து, செப்டம்பர் 1 முதல் நேரடி விசாரணை குறிப்பிட்ட சில வழக்குகளில் மட்டும் நடந்து வருகிறது. அதே நேரம் காணொலி மூலம் விசாரணையும் நடந்து வருகிறது. ஆனால், நீதிமன்ற வழக்கு விசாரணை முழுமையாக நேரடி விசாரணை முறைக்கு வரவில்லை.
இந்நிலையில் உச்ச நீதிமன்றப் பெண் வழக்கறிஞர்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, ''அனைத்து வழக்குகளையும் நேரடி விசாரணைக்கு மாற்றுவதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தயக்கமில்லை. பாதுகாப்பாக இருந்து கொள்வோம். ஆனால், நீதிமன்றத்துக்கு வரும் மக்கள் கூட்டத்தால் வழக்கறிஞர்கள், ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்று அவர்கள் உடல்நிலை பற்றி யோசிக்கிறோம்.
நடப்பு நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வழக்கறிஞர்கள் பின்பற்றுவதால் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வந்து செல்வது எளிதாகிறது. தசரா பண்டிகை முடிந்தபின் வழக்கம் போல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை நேரடியாக நடத்துவோம் என நம்புகிறேன். 3-வது அலை ஏதும் வரக்கூடாது'' எனத் தெரிவித்தார்.
கரோனா தொற்றுக்குப் பின் காணொலியில் நீதிமன்ற வழக்கு விசாரணை தொடங்கியபின், தொடர்ந்து 2 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுமுறை இல்லாமல் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1-ம் தேதி நீதிமன்றத்தில் சில வழக்குகளில் மட்டும் நேரடி விசாரணை தொடங்கப்பட்டாலும், வழக்கறிஞர்கள் கரோனா அச்சத்தால் காணொலி விசாரணையைத்தான் விரும்புகிறார்கள்.