

புதுடெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று மாலை நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தார்.
மத்திய அரசு சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைதளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும்.
பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. தரைதளம் மட்டும் 16,921 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது.
விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களை உருவாக்கப்பட உள்ளன. மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமரும் வகையில் கட்டப்பட உள்ளது. அதிலும் கூட்டுக் கூட்டத்தொடர் நடந்தால் 1,272 பேர் அமரும் வகையில் மிகவும் விஸ்தாரமாக அமைக்கப்பட உள்ளது.
இந்தப் புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தக் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி நேற்று இரவு 8.45 மணிக்குச் சென்றார். அங்கு கட்டிடப் பணிகளைக் கண்காணித்த பிரதமர் மோடி ஒரு மணி நேரம் வரை இருந்து அனைத்துப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
கட்டிடம் கட்டும் இடத்தில் இருக்கும் மேற்பார்வையாளர்கள், அதிகாரிகளிடம் பணிகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். கட்டிடப் பணிகளின் தற்போதைய நிலை, எப்போது முடியும், நாள்தோறும் நடக்கும் பணி நிலவரம் ஆகியவை குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏறக்குறைய ஒரு மணி நேரம் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்துவிட்டு பிரதமர் மோடி புறப்பட்டார்.