அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார் மோடி: டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

டெல்லி விமான நிலையத்தில் மோடிக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.  படம்: பிடிஐ
டெல்லி விமான நிலையத்தில் மோடிக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். படம்: பிடிஐ
Updated on
1 min read

அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு வாஷிங்டனில் கடந்த 24-ம் தேதி நடந்தது. இதில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று மாநாட்டில் கலந்து கொள்ளவும் நியூயார்க்கில் ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவும் பிரதமர் மோடி கடந்த 22-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் பிரதமர் களுடன் பேச்சுவார்த்தை நடத் தினார். குவாட் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மோடி, நேற்று முன்தினம் ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்திலும் உரையாற்றினார். நான்கு நாட்கள் அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை டெல்லி திரும்பினார்.

டெல்லி விமான நிலையத்தில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு மோடியை மேள தாளங்கள் முழங்க வரவேற்றனர். பின்னர், நடந்து சென்று தொண்டர்களின் வாழ்த்துகளை கையசைத்தபடி மோடி ஏற்றுக் கொண்டார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா பேசுகையில், ‘‘பிரதமர் மோடி தலைமையில் இந்தியா மீதான உலக தலைவர்களின் பார்வை மாறியுள்ளதை அவரின் அமெரிக்க பயணம் நிரூபித்துள்ளது. ஐ.நா.சபையில் மோடி பேசியதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்தன. சர்வதேச அளவில் இந்தியாவை தலைமையிடத்துக்கு மோடி கொண்டு வந்துள்ளார். அமெரிக்கப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து வந்துள்ள பிரதமரை கோடிக்கணக்கான இந்தியர்கள் சார்பில் வரவேற்கிறோம்’’ என்றார்.

முன்னதாக, டெல்லி வரும்முன் ட்விட்டரில் மோடி வெளியிட்ட பதிவில், ‘‘அமெரிக்க பயணத்தில் ஆக்கப்பூர்வமான இருதரப்பு மற்றும் பலமுனைப் பேச்சுகள், சந்திப்புகள், ஐ.நா.சபை கூட்டம் போன்றவற்றில் கலந்து கொண்டேன். வரும் ஆண்டுகளில் இந்திய - அமெரிக்க உறவு மேலும் வலுவாக வளரும். மக்களுக்கு இடையிலான தொடர்பு நமது பலமிக்க சொத்தாகும்’’ என்று கூறியுள்ளார். -பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in