

உத்தரபிரதேசத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜகஆட்சி நடைபெறுகிறது. சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில், மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அமைச்சரவையை நேற்று விரிவாக்கம் செய்து, முதல்வர் யோகி ஆதித்யநாத்நடவடிக்கை எடுத்துள்ளார். மொத்தம் 7 பேர் புதிய அமைச்சர்களாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதில் காங்கிரஸிலிருந்து வந்த ஜிதின் பிரசாதாவும் அடக்கம். லக்னோவிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் 7 புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஜிதின் பிரசாதாவைத் தவிர சங்கீதா பல்வந்த் பிந்த், பல்துராம், சஞ்சீவ் குமார் கவுர், தினேஷ் கட்டிக், சத்ரபால் கங்வார், தரம்வீர் பிரஜாபாதி ஆகியோர் அமைச்சர்களாக பதவி யேற்றுக் கொண்டனர். - பிடிஐ