

பஞ்சாப் அமைச்சரவை நேற்று விரிவுபடுத்தப்பட்டது. 15 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவி யேற்றனர்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்வராக இருந்து வந்த அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். அவருடன் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா, ஓ.பி. சோனி ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்கள் இருவரும் துணை முதல்வர்களாக உள்ளனர். அன்று வேறு யாரும் அமைச்சர் பதவியேற்கவில்லை.
இந்நிலையில், பஞ்சாப் அமைச்சரவை நேற்று விரிவுபடுத்தப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் பிரம் மொகிந்த்ரா, மன்பிரீத் சிங் பாதல், ராணா குர்ஜித் சிங், அருணா சவுத்ரி உள்ளிட்ட 15 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
புதிய அமைச்சர்களில் ராணா குர்ஜித் சிங் ஏற்கெனவே அம்ரீந்தர் சிங் அரசில் அமைச்சராக இருந்தவர். நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததால் 2018-ல் ராஜினாமா செய்தார். அவர் இப்போது மீண்டும் அமைச்சராகி உள்ளார்.
முன்னதாக, ஊழல் கறை படிந்த ராணா குர்ஜித் சிங்கை அமைச்சரவையில் சேர்க்கக் கூடாது என்று காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கும் கடிதம் எழுதினர்.
முதல்வருக்கும் அதன் நகலை அனுப்பி உள்ளனர். கட்சியினர் எதிர்ப்பை மீறி ராணா குர்ஜித் சிங்குக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ