

உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்த பிரிஜேஷ் தியாகி என்பவரின் மகன் ரேஷு (24) கொலை செய்யப் பட்டார். இதுகுறித்து போலீஸார் விசாரித்த போது பிரிஜேஷ் தியாகியின் இளைய சகோதரர் லீலு (45) சிக்கினார். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
ரூ.5 கோடி மதிப்பிலான பூர்வீக நிலத்தை முழுவதுமாக கைப்பற்ற லீலு திட்டம் போட்டுள்ளார். அதன்படி கடந்த 20 ஆண்டுகளில் 2001-ம் ஆண்டு தனது 2-வது சகோதரர் சுதிர் தியாகியையும், சில மாதங்கள் கழித்து அவரது இளைய மகள் பாயலையும் விஷம் கொடுத்து லீலு கொன்றுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சுதிரின் மூத்த மகள் பாரூலையும் கொலை செய்திருக்கிறார். எட்டு ஆண்டுக்கு முன்பு மூத்த சகோதரர் பிரிஜேஷ் தியாகியின் மகன் நிஷுவையும், கடந்த மாதம் அவரது இளைய மகன் ரேஷுவையும் கொலை செய்திருக்கிறார். சடலங்களை இரவு நேரங்களில் அருகில் உள்ள ஆறு, ஏரிகளில் வீசியுள்ளார்.
இதையடுத்து கடந்த வியாழக்கிழமை லீலுவை போலீஸார் கைது செய்தனர். கொலைகளுக்கு உடந்தையாக இருந்த லீலுவின் நண்பர்கள் ராகுல், சுரேந்திரா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீஸார் கூறினர்.