Published : 07 Jun 2014 01:10 PM
Last Updated : 07 Jun 2014 01:10 PM

ஆம் ஆத்மி கட்சிக்குள் பூசல் இல்லை; யோகேந்திர யாதவ் என் நெருங்கிய நண்பர்: கேஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் எழுப்பும் விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தி தீர்வு காண்போம் என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் உதவி வந்த ஷாஜியா இல்மியும், யோகேந்திர யாதவும், தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவாலின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

உள்கட்சி ஜனநாயகமில்லை என்றும், கேஜ்ரிவாலை சுற்றியுள்ள ஒரு கூட்டம்தான் முக்கிய முடிவுகளை எடுக்கிறது என்றும் ஷாஜியா இல்மி விமர்சித்திருந்தார். பின்னர், கட்சியை விட்டு விலகுவதாக அவர் அறிவித்தார்.

இந்நிலையில், கட்சியின் அரசியல் விவகாரக் குழுவிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்த யோகேந்திர யாதவ், தனி நபர் துதிபாடலுக்கு அடிமையாக இருப்பதாக கேஜ்ரிவால் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து யோகேந்திர யாதவின் விமர்சனத்திற்கு மறுப்புத் தெரிவித்து கேஜ்ரிவாலின் நெருங்கிய நண்பர் மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியிருந்தார். அதில், கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து பகிரங்கமாக பேசி வருவதாகவும், கேஜ்ரிவால் குறித்து தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதாகவும் யோகேந்திர யாதவ் மீது குற்றம் சாட்டினார்.

கட்சியின் முக்கிய தலைவர்களிடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதால், உள்கட்சி பூசல் வலுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஆட்சேபம் தெரிவிக்கும் தலைவர்களிடம் பேச்சு நடத்தவிருப்பதாக அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவால் ட்விட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது: “யோகேந்திர யாதவ் சில முக்கிய விவகாரங்கள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். அது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு எடுப்போம். யோகேந்திர யாதவ், எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர், மதிப்பு மிகுந்த தோழர். அவருடன் விரிவாக பேச்சு நடத்தி வருகிறேன்.

அதே போன்று கட்சியிலிருந்து விலகிய ஷாஜியா இல்மியை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என்றார்.

ஆம் ஆத்மி கட்சியில் தலைவர்கள் ராஜினாமா தொடர்பாக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் விவாதம் நடத்தித்தான் முடிவு செய்யப்படும். இக்குழுவைச் சேர்ந்தோர், ஷாஜியா இல்மியை மீண்டும் கட்சியில் இணைக்க நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று அரசியல் விவகாரக் குழுவை விரிவுபடுத்தி கூடுதல் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x