

கேரளாவில் 'ஆன்லைன் கேம்' போதையிலிருந்து குழந்தைகளை மீட்கும் மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக அறிவித்த முதல்வர் பினராயி விஜயன் மேலும் 20 'குழந்தைகள் நட்பு' காவல் நிலையங்களையும் நேற்று அறிவித்தார்.
டிஜிட்டல் பயன்பாட்டில் நன்மைகள் எந்த அளவுக்கோ அந்த அளவில் தீமைகளும் உள்ளதை தவிர்க்கமுடியாத நிலை ஏற்பட்டுவருகிறது. புற்றீசலைப் பெருகிவரும் ஆன்லைன் விளையாட்டுக்களால் பாதிக்கப்படும் குழந்தைகளை மீட்க முடியாதநிலையில் பெற்றோர்கள் அவதியுற்று தவித்து வரும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதனால் குழந்தைகள் பெரும்பாலான நேரங்களை தொடர்ந்து செலவிட்டு, தங்கள் கவனத்தை சிதறடித்து வருகின்றனர். மைதானங்களில் விளையாடி புத்துணர்ச்சியோடு இருக்கவேண்டிய இந்தப் பருவத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களில் மூழ்கி மூர்க்கத்தனமான நடத்தைக்கும் கடும் சோர்வுக்கும் ஆளாகி வருவதை பார்க்க முடிகிறது.
இதனைத் தடுக்கும்விதமாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது கேரள அரசு.
கேரள முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை கேரள காவல் துறைக்காக புதிதாக கட்டப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட கட்டிங்களை ஆன்லைனில் திறந்துவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்கு கேரள காவல்துறைத் தலைவர் அனில் காந்த் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பினராயி விஜயன் பேசியதாவது:
"ஆன்லைன் விளையாட்டுகளுக்கு குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர். இவர்களை உடனடியாக நாம் மீட்டெடுக்க வேண்டும். அவர்களை மீண்டும் சமூகத்தின் பொது நீரோட்டத்திற்கு கொண்டு வர வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
இதற்கான முக்கிய நடவடிக்கையாக காவல்துறையில் 'டிஜிட்டல் போதை மீட்பு மையங்கள்' இன்று திறந்து வைக்கப்படுகிறது. இதற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட வசதி விரைவில் நிறுவப்படும், பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.
மேலும் இன்று பல்வேறு மாவட்டங்களில் 'குழந்தை நட்பு' வசதியை அமைத்துக்கொள்ள 20 காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்படுகிறது. இதன்மூலம் 126 காவல்நிலையங்கள் குழந்தை நட்பு வசதி பெற்றுள்ளது.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.