

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகும்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றபின் இந்தியப் பிரதமராகியிருக்கலாம் என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் அதவாலே தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையி்ல் அமைச்சராக இருக்கும் ராமதாஸ் அத்வாலே இந்த கருத்தைக் கூறியிருப்பது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அ ரசு வெற்றி பெற்றபின், பிரதமராக சோனியாகாந்தி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருந்தபோது, வெளிநாட்டில் பிறந்தவர் எவ்வாறு இந்தியப் பிரதமராகலாம் என்று கூறி எதிர்ப்புக் கிளம்பியது. இந்நிலையில் ராமதாஸ் அத்வாலே இப்போது இந்தக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்தூரில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நீங்கள் பிரதமராக பதவி ஏற்கலாம் என நான்கூட தெரிவித்தேன்.என்னைப் பொறுத்தவரை சோனியா காந்தி வெளிநாட்டில் பிறந்தவர் என்ற வாதத்துக்கு அர்த்தமில்லை.
ஒருவேளை சோனியா காந்தி தான் பிரதமராக பதவி ஏற்க விருப்பம் இல்லாமல் இருந்திருந்தால், மன்மோகன் சிங்கை பிரதமராக நியமிப்பதற்குப் பதிலாக மூத்த தலைவரும், என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவாரை பிரதமராக நியமித்திருக்கலாம்.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பொறுப்பேற்கமுடிகிறது. அப்படியென்றால், சோனியா காந்தி ஒரு இந்தியக் குடியுரிமை பெற்றவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி, மக்களவைத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அவர் ஏன் பிரதமராக வரக்கூடாது.
இதில் என்சிபி கட்சியின் தலைவர் சரத் பவார் அனைத்துக்கட்சிகளாலும் மதிக்கப்படுபவர், பிரதமர் பதவிக்கு சரியானவர். மன்மோகன்சிங்கிற்கு பதிலாக சரத் பவாரை பிரதமராக சோனியா நியமித்திருக்கலாம் ஆனால் அதை அவர் செய்யவில்லை.
2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பிரதமராக சரத்பவாரை பிரதமராக நியமித்திருந்தால், காங்கிரஸ் கட்சியின் நிலை இன்று வலுவாக இருந்திருக்கும், பல்வேறு விதமான சரிவுகளில் இருந்து கட்சி காப்பாற்றப்பட்டிருக்கும்.
காங்கிரஸ் கட்சியுடன் அதிருப்தி ஏற்பட்டு பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கேப்டன் அமரிந்தர் சிங், பாஜகவில் இணையலாம். அவ்வாறு அவர் பாஜகவில் இணைந்தால், கட்சியும் வலுவடையும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும்
இவ்வாறு அத்வாலே தெரிவித்தார்.
காங்கிரஸ்கட்சியில் தீவிர விசுவாசியாக இருந்த சரத் பவார், கடந்த 1999ம் ஆண்டு சோனியா காந்தி வெளிநாட்டவர் என்ற விவகாரத்தை எழுப்பியதால்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை மகாராஷ்டிரவில் சரத்பவார் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.