Published : 26 Sep 2021 03:25 AM
Last Updated : 26 Sep 2021 03:25 AM

யானையை மீட்கும் பணியின் போது ஒடிசா நதியில் படகு கவிழ்ந்து பிரபல டிவி செய்தியாளர் உயிரிழப்பு

ஒடிசா நதியில் சிக்கிய யானையை மீட்கும் பணி நடந்தபோது படகுகவிழ்ந்ததில் பிரபல தொலைக் காட்சி செய்தியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டாக் அருகில் மகாநதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகளவில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அப்போது, அருகில் அதாகர் காட்டுப் பகுதியில் சுற்றித் திரிந்த யானை ஒன்று முண்டாலி அணைக்கருகில் மகாநதியின் நடுப்பகுதிக்கு சென்று விட்டது.

அதற்குள் கரையில் மக்கள் கூட்டம் கூடியது. அதனால் பயத்தில் யானை மீண்டும் கரை பகுதிக்கு வராமல் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து ஒடிசா பேரிடர் அதிரடி மீட்புப் படையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்தனர். சக்திவாய்ந்த விசைப்படகில் யானையை மீட்க நதியில் சென்றனர். ஒரு கரையில் இருந்து நதியில் சென்று யானையை விரட்டினால், மறுகரைக்கு யானை சென்றுவிடும் என்று திட்டமிட்டனர். அவர்களுடன், ஒடிசாவின் பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் அரிந்தம் தாஸ் (39) புகைப்படக் கலைஞர் பிரவத் சின்கா ஆகியோரும் சென்றனர்.

ஆனால், நதியில் சென்ற போது திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு படகு தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் வெள்ளத்தில் மூழ்கினர். உடனடியாக மற்றொரு மீட்புப் படையினர் விரைந்து சென்று நதியில் இருந்து 3 மீட்புப் படையினர், செய்தியாளர் அரிந்தம் தாஸ், புகைப்படக் கலைஞர் பிரவத் சின்காவை மீட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக கட்டாக் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். எனினும் அரிந்தம் தாஸ்பரிதாபமாக உயிரிழந்தார். பிரவத் சின்கா தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக கட்டாக் மருத்துவமனை நிர்வாகம் கூறி யுள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழந்த அரிந்தம் தாஸுக்கு மனைவி, மகள், தாய் உள்ளனர். இவர் ஒடிசாவின் பிரபல ஓடிவி தலைமை செய்தியாள ராக இருந்தார். இவர் புயல், வெள்ளம், பேரிடர், நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகள், குற்ற வழக்குகள், காட்டுப் பகுதிகள், வனவிலங்குகள் தொடர்பான பல்வேறு செய்திகளை சேகரித்து வழங்கி உள்ளார்.

ஆளுநர் இரங்கல்

அரிந்தம் தாஸ் இறப்புக்கு ஒடிசா ஆளுநர் கனேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தலைவர்கள் பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x