கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸில் அடுத்தவாரம் இணைகிறார்கள்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னையாகுமார் | கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னையாகுமார் | கோப்புப்படம்
Updated on
1 min read

டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் மற்றும் ராஷ்ட்ரிய தலித் அதிகார் மஞ்ச் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் அடுத்த வாரம் சேரக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவரான கன்னையா குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் சமீபகாலமாக தொடர்பில் இருந்து வந்தார். இதனால் விரைவில் காங்கிரஸில் இணைவார் எனக்கூறப்பட்டது.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகப் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் இளம் தலைவர்கள் ஜிதன்பிரசாதா, பிரியங்கா சதுர்வேதி, சுஷ்மிதா தேவ் போன்றோர் வெளியேறிவிட்டனர்.

இதனால், பிரச்சாரத்துக்கு வலுவான இளம் தலைவர்கள், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பேசக்கூடியவர்கள் தேவை என்பதால், கன்னையா குமாருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் கட்சியில் இளம் தலைவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகமான முக்கியத்துவம் வழங்க ராகுல் காந்தி விரும்புகிறார் அதன் காரணமாகவே கன்னையா குமார் இணைவு இருக்கலாம் எனத் தெரிகிறது.

குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். இது தொடர்பாகவும் மேவானியுடன் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் பேசி வந்தது சமூகமான முடிவை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் மேவானியின் வெற்றி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, அவருக்கு எதிராக வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி இருவரும் அடுத்த வாரம் காங்கிரஸ் கட்சியில் சேர்வார்கள் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in