

மாற்றுத்திறனாளிகள், வய துமுதுமை காரணமாக நடக்க முடியாதவர்கள், நீ்ண்ட தொலைவு நடக்க முடியாதவர்கள் போன்றவர்களுக்கு உரிய கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி அவர்கள் இருக்கும் இடத்துக்கே வந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நிதிஆயோக்கின் சுகாதார உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால், சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது மருத்துவர் வி.கே.பால் கூறியதாவது:
நாட்டில் உள்ள வயதுவந்தோர் மக்கள் தொகையில் 66 சதவீதம் பேருக்கும் அதிகமாக குறைந்தபட்சம் ஒரு டோஸ்தடுப்பூசி செலுத்தி மைல்கல்லை எட்டிவிட்டோம். அதிகபட்சமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி வீட்டருகே தடுப்பூசி முகாம் இருந்தும் அங்கு செல்ல முடியாத மாற்றுத்திறனாளிகள், வீ்ட்டில் நடக்க முடியாத நிலையில் இருப்போர், வயது முதுமை காரணமாக நடக்க முடியாதோர், நீண்டதொலைவு நடக்க முடியாதவர்கள் ஆகியோருக்கு வீட்டுக்கே வந்து தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக சிறப்பான குழு அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்துவது கண்காணிக்கப்படும்.
இந்தத் தடுப்பூசி செலுத்தும் போது மத்திய அரசின் அனைத்துவிதமான கரோனா பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும். தடுப்பூசி செலுத்தும் திட்டம் என்பது, அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும், மக்களுக்கானதாக இருக்க வேண்டும்.
சில காரணங்களால் தடுப்பூசி முகாமுக்கு வந்து தடுப்பூசி செலுத்த முடியாதவர்கள் கூறும் காரணம் நியாயமானதாகஇருந்தால்அது பரிசீலிக்கப்பட்டு வீட்டுக்கே வந்து தடுப்பூசி செலுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறுகையில் “ புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது, மக்கள் கரோனா தடுப்பு விதிகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். லட்சத்தீவுகள், சண்டிகர், கோவா, இமாச்சலப்பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவுகள், சிக்கம் ஆகியவற்றில் 100 சதவீதம் முதல்டோஸ் முடிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தில் எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற ேவண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்க வேண்டும், 5 சதவீதத்துக்கு மேல் பாஸிட்டிவ் இருக்கும் மாவட்டங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதைத் தடுக்க வேண்டும்.
அவ்வாறு கூடுவதென்றால் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். 5சதவீதம் அல்லது அதற்கு குறைவாக இருக்கும் மாவட்டங்களில் கூட்டம் நடத்தவும், பங்கேற்கவும் கட்டுப்பாடுகள் இருக்கும்” எனத் தெரிவித்தார்.