Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

விமானப் படைக்கு சி-295 விமானங்கள் வாங்க முடிவு: மத்திய அரசின் ஒப்பந்தத்துக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா வரவேற்பு

இந்திய விமானப்படைக்கு சி.295 ரக விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மொத்தம் 56 விமானங்களை ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப் போவதாக அறிவித்துள்ளது.

இந்த முடிவை தொழிலதிபர் ரத்தன் டாடா பெரிதும் வரவேற்றுள்ளார்.

இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்பட்டு வந்த ஆவ்ரோ-748 ரக விமானங்கள் காலாவதியானதால் அதன் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து சி-295 ரக விமானங்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி 16 விமானங்களை ஏர் பஸ் நிறுவனம் ஸ்பெயினில் உள்ள செவிலே எனுமிடத்தில் தயாரித்து அளிக்கும். எஞ்சிய 40 விமானங்களை இந்தியாவில் கட்டுமானம் செய்து அளிக்கும். இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனம் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் (டிஏஎஸ்எல்) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் ஏர்பஸ் டிபென்ஸ் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் நிறுவனம் கூட்டாக தயாரித்து விமானங்களை அளிக்கும் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதைப் பாராட்டியுள்ள ரத்தன் டாடா, இதனால் விமான தயாரிப்பு துறையில் இந்தியா புதிய இலக்குகளை எட்ட வழி ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பன்முகத் தன்மை கொண்ட சி-295 விமானம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது. மேலும் விமானப் படையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இது இந்தியாவில் தயாரிக்கப்படுவது விமான கட்டுமானத் துறையில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

ஏர்பஸ் டிபென்ஸ் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் லிமிடெட் நிறுவன நிர்வாகிகளை பாராட்டியுள்ளதோடு, இந்திய விமானப் படைக்கு இத்தகைய விமானங்களை தயாரித்து அளிக்க முன்வந்துள்ளது சிறப்பான நடவடிக்கை என்று குறிப்பிட்டுள் ளார்.

உள்நாட்டு விமான தயாரிப்பு திறனை சர்வதேச தரத்துக்கு மேம் படுத்தும் இதுபோன்ற முயற்சிகள் முன்பு எடுக்கப்பட்டது கிடையாது. பன்முக தன்மை கொண்ட விமானத்தை இந்தியாவில் தயாரிப் பதற்கு ஒத்துழைப்பு அளித்து அதை ஊக்குவிப்பதால் மேக் இன் இந்தியா திட்டம் நிறைவேறும். மேலும் விமான தயாரிப்பிலும் இந்தியா வளர்ச்சியடைய வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச் சரவை குழு ஒப்புதல் அளித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகே இந்த ஒப்பந்தம் கையெழுத் தாகியுள்ளது.

நான்கு ஆண்டுகளில் 16 விமானங்கள் அளிக்கப்படும். இந்த விமானங்கள் அனைத்திலும் இடபிள்யூஎஸ் சாதனம் இடம் பெறும் என்று ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் 15 ஆயிரம் திறன் மிகு பணியாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும் 10 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் அடுத்த 10 ஆண்டுகளில் உருவாகும் என்று ஏர்பஸ் தலைமைச் செயல் அதிகாரி மைக்கேல் ஷோல்ஹோர்ன் தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x