Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

தவறாக முடிதிருத்தம் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலான ஐடிசி மவுரியாவில் செயல்படும் சலூனுக்கு கடந்த 2018-ம் ஆண்டு பெண் மாடல் ஒருவர் முடி திருத்தம் செய்ய சென்றுள்ளார். அங்கு சிகையலங்கார நிபுணரிடம் முடியை கீழ் பக்கத்திலிருந்து 4 அங்குலம் வெட்டும் படி கூறியுள்ளார்.

ஆனால், முடி திருத்துபவரோ கவனக் குறைவில் அவரது முழு நீள முடியையும் வெட்டிவிட்டார். தலைமுடி சார்ந்த முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு முன்னணி மாடலாக விரும்பிய அப்பெண்மணி இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகார் மனுவில் கூறியதாவது: ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஹேர்கட் செய்வதற்காக கண்ணாடியை கழற்றி வைத்ததாலும், ஹேர்கட் செய்ய ஏதுவாக தலையை குனிந்தபடி இருக்குமாறு முடி திருத்துபவர் கூறியதாலும் கண்ணாடியில் ஹேர்கட் செய்வதை சரியாக பார்க்க முடியவில்லை. முடியை வெட்டி முடித்த பின்னரே பார்க்க முடிந்தது, அவர் கீழிருந்து 4 அங்குலம் முடியை வெட்டுவதற்கு பதிலாக, மேலிருந்து 4 அங்குலம் மட்டும் முடியை விட்டுவிட்டு, மொத்த முடியையும் வெட்டி விட்டார். இதற்கு சலூன் மேலாளரும் முறையாக பதிலளிக்கவில்லை. இதையடுத்து, ஐடிசி ஓட்டலின் அப்போதைய தலைமை அதிகாரி தீபக் ஹக்ஸரிடம் சம்பவத்தை கூறினேன்.

இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், ஹேர்கட் செய்த தற்கான தொகையைப் பெறவில்லை. அதேநேரம் தவறு செய்த ஊழியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முடி வளர சிகிச்சை

மேலும் முடி வளர்வதற்கான சிகிச்சையை அளிக்கவும் முன்வந்தனர். ஆனாலும் தொடர்ந்து இதுதொடர்பாக மோசமான அனுபவங்களே கிடைத்தன. சிகிச்சையின் போது, அதிகப்படியான அம்மோனியாவால் தலைமுடி முற்றிலும் சேதமடைந்தது. அதோடு, உச்சந்தலையில் அதிக எரிச்சலும் ஏற்பட்டுள்ளது. இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன் என்று அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நுகர்வோர் நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், விஎல்சிசி, பேன்டீன் போன்ற முன்னணி பிராண்டுகளுக்கு மாடலாக இருந்த அந்தப் பெண் தனது முடியை இழந்ததால், முன்னணி சிறந்த மாடலாகும் கனவை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சலூனின் கவனக்குறைவு காரணமாக, அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதோடு, துறை சார்ந்த வேலை வாய்ப்புகளையும் இழந்துள்ளார்.

இது அவரது வாழ்க்கை முறையை முற்றிலுமாக மாற்றி சிறந்த மாடலாகும் கனவை சிதைத்துள்ளது. இவற்றை கருத்தில்கொண்டு ஐடிசி மவுரியா ஹோட்டல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x