Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM

அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் துறவி நரேந்திர கிரி மரணம் குறித்து சிபிஐ விசாரணை: 6 பேர் கொண்ட குழு உ.பி.யின் பிரயாக்ராஜ் நகருக்கு விரைவு

உத்தர பிரதேசத்தில் அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் துறவி மகந்த் நரேந்திர கிரி மர்ம மரணம் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழு பிரயாக்ராஜ் விரைந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அகில பாரதிய அகாரா பரிஷத் மடத்தின் தலைவராக இருந்தவர் துறவி மகந்த் நரேந்திர கிரி. இந்தியாவிலேயே துறவிகளுக்கான பெரிய அமைப்பாக இந்த பரிஷத் விளங்குகிறது. தலைநகர் லக்னோவில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் இதன் ஆசிரமம் உள்ளது. இங்கு கடந்த திங்கட்கிழமை மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி மகந்த் நரேந்திர கிரி இறந்து கிடந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணம் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உறுதியாக கூறினார். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.

இதற்கிடையில், துறவி நரேந்திர கிரியின் அறையில் 13 பக்கங்கள் கொண்ட கடிதமும் இருந்தது. அதில், ‘‘ஆசிரமத்தில் 2-வது நிலையில் உள்ள தனது சீடர் ஆனந்த் கிரி, ஆத்ய திவாரி மற்றும் அவரது மகன் சந்தீப் திவாரி ஆகியோர்தான் எனது மரணத்துக்கு காரணம். ஒரு பெண்ணுடன் நான் இருப்பது போன்ற புகைப்படம் போலியாக உருவாக்கப்பட்டுள்ளது. அதை வெளியிட்டு என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சதி நடக்கிறது. இனி நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை’’ என்று மகந்த் நரேந்திர கிரி குறிப்பிட்டிருந்தார்.

அவர் இறப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர், தனது மொபைல் போனில் நரேந்திர கிரி வீடியோவில் பேசியுள்ளார். மொத்தம் 4 நிமிடங்கள் 30 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவிலும், கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவல்களைப் பதிவு செய்துள்ளார். இதையடுத்து மகந்த் நரேந்திர கிரி குறிப்பிட்டிருந்த சீடர் ஆனந்த் கிரி உட்பட 3 பேரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உ.பி. அரசு கடந்த புதன்கிழமை பரிந்துரை செய்தது. அதை மத்திய அரசு ஏற்று சிபிஐ விசாரணைக்கு கடந்த வியாழக்கிழமை உத்தர விட்டது. இந்நிலையில், 6 பேர் கொண்ட சிபிஐ விசாரணை குழு பிரயாக்ராஜ் விரைந்துள்ளது.

இதற்கிடையில், ஆனந்த் கிரியின் ஆடம்பர வாழ்க்கை தொடர் பான படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைர லாகி வருகின்றன. அவற்றில் விமானத்தில் இருந்து குதித்து (ஸ்கை டைவிங்) சாகசம் செய்வது, விலை உயர்ந்த லம் போர்கினி கார் முன் போஸ் கொடுப்பது, பிரான்சில் சுற்றுலா சென்றது போன்ற படங்கள் இடம் பெற்றுள்ளன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x