

இந்திய விமானப் படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா வரும் 30-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி விமானப் படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
விவேக் ராம் சவுத்ரி தற்போது விமானப் படையின் துணைத் தளபதியாக உள்ளார். மிக்-29 ரக போர் விமானங்களை இயக்குவதில் வல்லவரான இவர் கிட்டத்தட்ட 39 ஆண்டு கால அனுபவம் கொண்டவர். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்ற சவுத்ரி 1982 டிசம்பரில் இந்திய விமானப் படையில் போர் விமானியாக சேர்ந்தார். 3,800 மணி நேரத்துக்கு மேல் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர், மிக்-21, மிக்-23 எம்எப், மிக் 29, சுகோய் 30 எம்கேஐ உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை இயக்கியுள்ளார். விமானப் படை தளபதியாக சவுத்ரி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்திய விமானப் படையின் துணைத் தளபதியாக ஏர் மார்ஷல் சந்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மேற்குப் பிரிவு தலைமை கமாண்டராக உள்ள ஏர் மார்ஷல் பி.ஆர்.கிருஷ்ணா, ஒங்கிணைந்த பாதுகாப்பு ஊழியர்களின் புதிய தலைவராக பதவியேற்க உள்ளார்.