

வேலை செய்துகொண்டே படித் தால் என்ன தவறு என்று கேட்ட செய்தித்தாள் விநியோகிக்கும் மாணவரை தெலங்கானா அமைச்சர் கே.டி. ராமாராவ் மிகவும் பாராட்டியுள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஜகத்தியாலா நகரைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (13). அங்குள்ள அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தங்கள் வீட்டின் பொருளாதார நிலைமையை அறிந்து, காலையில் சைக்கிளில் வீடு வீடாகச் சென்று செய்தித்தாள் விநியோகித்து வருகிறார்.
இந்நிலையில் ஜெயப்பிரகாஷிடம் ஒருவர் சென்று, “படிக்கும் வயதில் பேப்பர் போடுகிறாயே?” என்று கேட்கிறார். அதற்கு ஜெயப்பிரகாஷ், “ஏன்.. போட்டால் என்னதவறு?” என்று கேட்கிறார். படிக்கும்வயதில் பணி செய்தால் கல்வி பாதிக்கப்படும் அல்லவா என அவரிடம் மீண்டும் கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு ஜெயப்பிரகாஷ், “வேலை பார்த்துகொண்டே படித்தால் என்ன தவறு? இந்த வயதில் கஷ்டப்பட்டால் பெரியவன் ஆன பின்பு, எந்த வேலையையும் சுலபமாக செய்து விடலாம்” என பதில் அளிக்கிறார்.
இது தொடர்பான இந்த வீடியோ பதிவு தற்போது தெலங்கானாவில் வைரல் ஆகி வருகிறது. இதை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும் தகவல் தொழில்நுடபத் துறை அமைச்சருமான கே.டி. ராமாராவ் நேற்று பார்த்துள்ளார். பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த மாணவரின் வீடியோவை பதிவிட்டு வெகுவாக பாராட்டியுள்ளார்.
அமைச்சர் ஆச்சரியம்
“ஜகத்தியாலா நகரை சேர்ந்த மாணவர் ஜெயப்பிரகாஷின் மன தைரியத்தை பார்த்து ஆச்சர்யமும் சந்தோஷமும் அடைந்தேன். இந்த சிறுவயதில் மன முதிர்ச்சியை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். வேலை பார்த்துக்கொண்டே படிப் பதில் என்ன தவறு என ஆணி அடித்தது போல் கேட்கிறார். வருங்காலத்தில் ஜெயப்பிரகாஷ் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கி கொள்வான் எனும் நம்பிக்கை உள்ளது. வாழ்த்துகள்!” என அமைச்சர் கூறியுள்ளார்.