

உதம்பூர் தாக்குதலில் தேடப்பட்டு வந்த பாகிஸ்தான் தீவிரவாதி அபு ஒகாஷா, காஷ்மீரில் வியாழனன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 வீரர்கள் இறந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.
இத்தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி அபு ஒகாஷாவுக்கு பற்றிய தகவலுக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், புச்சால் பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோரிபோரா என்ற கிராமத்தில் பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கடும் துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் அபு ஒகாஷா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த மோதலின்போது சுற்றி வளைக்கப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் காஷ்மீர் தலைவர் அபு துஜானா மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் தப்பிச் சென்றுவிட்டனர்.
தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளூர் மக்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி கவனத்தை திசை திருப்பியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.